தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹமாசுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் கண்டனக் குரல்

1 mins read
e139b731-2b99-4b24-a01a-8e38c98403b8
காஸாவுக்குள் அத்தியாவசியப் பொருள்களுடன் செல்லும் லாரிகளை இஸ்‌ரேல் தடுத்து நிறுத்தியுள்ளது. - படம்: ஏஎஃப்பி

பிரசல்ஸ்: ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) கண்டனக் குரல் எழுப்பியது.

காஸா போர் நிறுத்த உடன்படிக்கையின் இரண்டாவது கட்டத்தை ஹமாஸ் ஏற்க மறுப்பதாக அது சாடியது.

இந்நிலையில், காஸாவுக்குள் அத்தியாவசியப் பொருள்களுடன் செல்லும் லாரிகளை இஸ்‌ரேல் தடுத்து நிறுத்தியுள்ளது.

இதனால், போரின் காரணமாக ஏற்கெனவே கடுந்துயருக்கு ஆளாகியுள்ள பாலஸ்தீனர்கள் மேலும் பாதிக்கப்பட்டு மனிதாபிமான நெருக்கடிநிலை ஏற்படும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.

“போர் நிறுத்த உடன்படிக்கையின் இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை உடனடியாகத் தொடங்க வேண்டும். சமரசப் பேச்சாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அதன் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது,” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு விவகாரங்கள், பாதுகாப்புக் கொள்கைப் பிரிவின் செய்தித்தொடர்பாளர் அன்வார் அல் அனாவ்னி தெரிவித்தார்.

“போர் நிறுத்தம் நிரந்தரமாக்கப்பட்டால் எஞ்சியுள்ள இஸ்‌ரேலியப் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவதற்கு அது பங்களிக்கும். அதே சமயம் காஸா மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அது கைகொடுக்கும்,” என்றார் திரு அனாவ்னி.

இந்த நோக்கம் நிறைவேற அனைத்துத் தரப்பினருக்கும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

போர் நிறுத்த உடன்படிக்கை நீட்டிப்பை ஹமாஸ் ஏற்க மறுக்கிறது.

உடன்படிக்கையின் இரண்டாம் கட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று அது வாதிட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்