கூகல் நிறுவனத்திற்கு $590 மில்லியன் அபராதம் விதித்த ஐரோப்பிய ஒன்றியம்

கூகல் நிறுவனத்திற்கு $590 மில்லியன் அபராதம் விதித்த ஐரோப்பிய ஒன்றியம்

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

21 Sep 2026 - 10:09 pm

2 mins read

பயனர்களின் இருப்பிடத் தரவை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காகக் கூகல் நிறுவனத்திற்கு 403 மில்லியன் யூரோ ($590 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் செயல்படும் அயர்லாந்தின் தரவுப் பாதுகாப்பு ஆணையம் திங்கட்கிழமை (செப்டம்பர் 21) தெரிவித்தது.

2018ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுத் தரவுப் பாதுகாப்பு விதிமுறைகளை கூகல் மீறியதாக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், இணையம், செயலிகளின் வழியே பெறப்படும் இருப்பிடத் தரவு, இருப்பிட வரலாறு ஆகியவற்றைக் கூகல் கையாண்ட விதத்தில் தவறு இருப்பது கண்டறியப்பட்டதாக 2020ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.

பயனர்களின் இருப்பிடத் தரவைக் கொண்டு விளம்பரங்களை அவர்கள்மீது திணிப்பதையோ அல்லது அவர்களின் விருப்பங்களை அறிந்து கொள்வதையோ பயனர்கள் உணராத வகையில் கூகலின் செயல்பாடுகள் அமைந்திருந்ததாக ஆணையத்தின் துணை ஆணையர் கிரகாம் டாயில் சுட்டிக்காட்டினார்.

மேலும், தேவைக்கு அதிகமான காலம் இருப்பிடத் தரவைச் சேமித்து வைத்தது பயனர்களின் கட்டுப்பாட்டைப் பறிக்கும் செயலை தீவிரப்படுத்தியது என்றும் அவர் கூறினார்.

அபராதத்துடன் சேர்த்து, ஆறு மாதங்களுக்குள் தரவைக் கையாளும் நடைமுறைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டுச் சீரமைக்குமாறும் கூகலுக்கு அது உத்தரவிட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்த கூகல் நிறுவனம், இந்த வழக்கு ஏற்கெனவே புதுப்பிக்கப்பட்ட பழைய கொள்கைகள் தொடர்பானது எனக் கூறியுள்ளது.

2019ஆம் ஆண்டிலிருந்து நடைமுறை கணிசமாக மேம்படுத்தப்பட்டு, இருப்பிடத் தரவை எளிதாக நிர்வகிக்கும் நவீனக் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்