13 வயதிற்குக்கீழ் உள்ளவர்களுக்குச் சமூக ஊடகத் தடை: ஐரோப்பிய ஒன்றியம்

13 வயதிற்குக்கீழ் உள்ளவர்களுக்குச் சமூக ஊடகத் தடை: ஐரோப்பிய ஒன்றியம்

படம்: ஏஎஃப்பி

17 Sep 2026 - 5:48 pm

2 mins read

ஸ்ட்ராஸ்பர்க், பிரான்ஸ்: ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் புதன்கிழமை (செப்டம்பர் 16) அறிமுகப்படுத்திய திட்டங்களின்கீழ், 13 வயதிற்குக்கீழ் உள்ள குழந்தைகளுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்கும்.

அத்துடன், 15 வயதுவரை, கட்டுப்படுத்தப்பட்ட, கண்காணிப்புடன் கூடிய அனுமதி மட்டுமே வழங்கப்படும்.

சமூக ஊடகங்களுக்கு எதிராக உலகம் முழுவதும் எழுந்துள்ள எதிர்ப்பு, கொள்கை வகுப்பாளர்கள் இடையே நெருக்கடியை அதிகரித்துள்ளது. குழந்தைகளின் உடல், மனநலத்தில் சமூக ஊடகங்கள் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தமது வருடாந்தர உரையின்போது திருவாட்டி வான் டெர் லேயன், “ஐரோப்பா செயல்படவேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்று கூறினார்.

மேலும், “எங்கள் விதிகளை நாங்கள்தான் தீர்மானிக்கிறோமே தவிர, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அல்ல,” என்றும் அவர் எச்சரித்தார்.

2025ல் 16 வயதிற்குக்கீழ் உள்ள குழந்தைகளுக்குச் சமூக ஊடகங்களைத் தடை செய்த முதல் நாடு ஆஸ்திரேலியா. இது மற்ற இடங்களிலும் அதுபோன்ற நடவடிக்கைகளைத் தூண்டியது. ஆனால், 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் மேலும் படிப்படியான அணுகுமுறையை எடுக்கும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் தெரிவித்தார்.

“13 வயதிற்குக்கீழ் உள்ளவர்களுக்குச் சமூக ஊடகங்கள் கிடையாது. 15 வயதிற்கு உட்பட்டோருக்குத் தனிப்பட்ட கணக்குகள் கிடையாது,” என்று அவர் கூறினார்.

“அதாவது 13 முதல் 15 வயதிற்கு உட்பட்டவர்கள், பெற்றோர் அல்லது காப்பாளர்களால் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்படும், குறைந்தபட்ச அம்சங்கள் மற்றும் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் என்ற நேரக் கட்டுப்பாட்டுடன் கூடிய கணக்குகளை மட்டுமே பயன்படுத்த முடியும்.”

“அதோடு, 15 முதல் 18 வயதிற்கு இடைப்பட்ட குழந்தைகளுக்குப் பாதுகாப்பான வடிவமைப்பு என்பது சமூக ஊடகத் தளங்களுக்குக் கட்டாயமாக்கப்படும்,” என்றார் திருவாட்டி வான் டெர் லேயன்.

குறிப்புச் சொற்கள்