பாரிஸ்: ஐரோப்பிய நாடுகள் அவற்றின் கூட்டுப் பாதுகாப்புக்குக் கூடுதலாகச் செயலாற்ற வேண்டும் என்று பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோன், பிப்ரவரி 16ஆம் தேதி கூறியுள்ளார்.
உக்ரேனியப் போரை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சி குறித்து அதிகரித்துவரும் கவலைகள் தொடர்பான உயர்நிலைச் சந்திப்புக்கு முன்பாக அதிபர் மெக்ரோன் அவ்வாறு கூறினார்.
அந்தச் சந்திப்பு பாரிஸில் பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
உக்ரேனிய விவகாரம் சூடுபிடிப்பதையும் அதன் தொடர்பிலான அமெரிக்கத் தலைவர்களின் கருத்துகளையும் சுட்டிய பிரெஞ்சு அதிபர் அலுவலக ஆலோசகர் ஒருவர், “நமது கூட்டுப் பாதுகாப்புக்காக ஐரோப்பியர்கள் மேம்பட்ட, ஒன்றுபட்ட முறையில் செயலாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது,” என்றார்.
பாரிஸ் சந்திப்பில் முக்கிய ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உக்ரேனிய நிலவரம் குறித்தும் ஐரோப்பியப் பாதுகாப்பு குறித்தும் கலந்துரையாடவிருப்பதாக பிரெஞ்சு அதிபர் கூறினார்.
ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி, போலந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இச்சந்திப்பில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய மன்றத் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லெய்ன், நேட்டோ அமைப்பின் தலைமைச் செயலாளர் மார்க் ரட் ஆகியோரும் இதில் கலந்துகொள்வர்.
ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்து, இம்மாதம் (பிப்ரவரி) 24ஆம் தேதியுடன் மூன்று ஆண்டுகள் முடியவிருக்கும் நிலையில் இச்சந்திப்பு நடைபெறுகிறது.