மலேசியாவில் மின்சார வாகன மின்கலன் மறுபயனீட்டுக்குக் குரல்

2 mins read
c8d442be-bd7e-4e1d-8558-2e1ec0ef393a
மின்சார வாகன மின்கலன்களை மறுபயனீடு செய்ய சுற்றுச்சூழல் குழுக்கள் குரல் கொடுக்கின்றன. - படம்: soyacincau.com / இணையம்

பெட்டாலிங் ஜெயா: மலேசிய அரசாங்கம், மின்சார வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் சக்தி இழந்த மின்கலன்களை மறுபயனீடு செய்வதை ஊக்குவித்து வருகிறது.

அந்த வகையில், மின்சார வாகன மின்கலன்களை மறுபயனீடு செய்யும் போக்கை உற்பத்தி நிறுவனங்கள், பயனர்கள் இரு தரப்பையும் கடைப்பிடிக்கும்படி செய்யவேண்டும் என்று சுற்றுச்சூழல் குழுக்கள் கூறுகின்றன.

மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் அல்லது இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், எத்தனை மின்சார வாகனங்களை விற்கின்றனவோ அதே எண்ணிக்கையில் மின்கலன்களைத் திரும்பப் பெறுவதை சட்டபூர்வமாக ஆக்க வேண்டும் என்று ‘சஹாபாத் அலாம் மலேசியா’ குழுவின் தலைவர் மீனாட்சி ராமன் கூறினார். மலேசியாவில் விற்கப்படும், இறக்குமதியாகும் மின்சார வாகனங்களுக்கு இது பொருந்தும்.

“அவ்வாறு செய்யாவிட்டால் அபராதம் விதிக்கவேண்டும் அல்லது சட்ட ரீதியாக தண்டனை விதிக்கவேண்டும். அதிக காலத்துக்கு இயங்கக்கூடிய அல்லது எளிதில் மறுபயனீடு செய்யக்கூடிய மின்கலன்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வரி அனுகூலங்கள் வழங்கப்படவேண்டும்,” என்றார் அவர்.

உற்பத்தி நிறுவனங்கள் மின்சார வாகன மின்கலன்கள் பாதுகாப்பாக அகற்றப்படுவதை அல்லது அவற்றை மறுபயனீடு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று மலேசிய சுற்றுப்புற பாதுகாப்புச் சங்கத்தின் துணைத் தலைவர் ரேண்டால்ஃப் ஜெரிமயா கூறினார்.

“உற்பத்தி நிறுவனங்களைத் சொந்த மறுபயனீட்டு ஆலைகள அமைக்கச் செய்ய வேண்டும். உள்ளூரில் அல்லது அவற்றின் சொந்த ஊரில் அதைச் செய்யலாம். இல்லாவிடில் அவை மறுபயனீட்டுத் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படலாம்,” என்று திரு ரேண்டால்ஃப் ஜெரிமயா விவரித்தார்.

இக்கோனைட்ஸ் (EcoKnights) அமைப்பின் தலைவர் அம்லிர் அயாத், இந்த விவகாரத்தைக் கையாள சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட வேண்டும் என்றார். குறிப்பாக மறுபயனீடு செய்ய முடியாத மின்சார வாகன மின்கலன்களுக்கு இது பொருந்தும்.

“இதில் எல்லா தரப்பினரையும், குறிப்பாக உற்பத்தியாளர்கள் மற்றும் பயனர்கள், ஈடுபடச் செய்வதே இப்போது முக்கியம். மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அபாயங்களைத் தடுக்கும் நோக்கில் தெளிவாகத் தொடர்புகொள்வதன் மூலம் அதைச் செய்யவேண்டும்,” என்று அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்