ஜெய்ப்பூர்: ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் போரில் சமரசம் செய்ய அமெரிக்கா இன்னும் தயாராக உள்ளது என்று செவ்வாய்க்கிழமை (மே 26) அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ கூறியுள்ளார்.
உக்ரேன் தலைநகர் கியவ்மீது மாஸ்கோ மே 25ஆம் தேதி பெரிய தாக்குதலைத் தொடுத்த பின்னர், திரு ரூபியோ அவ்வாறு தெரிவித்தார்.
“ஒவ்வொரு முறையும் இருதரப்பிலிருந்தும் இதுபோன்ற பெரிய தாக்குதல்களைப் பார்க்கும்போது, இது ஏன் இரண்டாம் உலகப் போரைவிட நீண்ட காலமாக நீடிக்கும் கொடூரமான போர் என்பதையும் இது முடிவுக்கு வரவேண்டும் என்பதையும் நினைவூட்டுகிறது,” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவுடன் தொலைபேசியில் உரையாடிய பின்னர் திரு ரூபியோ சொன்னார்.
இந்தியாவுக்கான தமது அதிகாரபூர்வப் பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய திரு ரூபியோ, “இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவுவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. மேலும் அதற்கான வாய்ப்பு ஒரு கட்டத்தில் அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறினார்.
வார இறுதியில் உக்ரேன்மீது ஏராளமான ஆளில்லா வானூர்திகளையும் ஏவுகணைகளையும் ரஷ்யா பாய்ச்சியதில் நான்கு பேர் மாண்டனர். இந்நிலையில், கியவ் நகரின் ‘முக்கிய உத்திபூர்வ மையங்கள்’ உட்பட பல்வேறு இலக்குகள்மீது மேலும் பல தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா மே 25ஆம் தேதி கூறியது.
ஈரான் உடனான ஒப்பந்தம் சில நாள்களுக்குள் சாத்தியம்
இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள், ஈரானுடனான சண்டைநிறுத்த உடன்பாட்டைப் பலவீனமடையச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆயினும் ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள இன்னும் சாத்தியம் இருப்பதாகத் திரு ரூபியோ மே 26ஆம் தேதி கூறினார்.
“இன்று கத்தாரில் சில பேச்சுவார்த்தைகள் நடந்தன. எனவே முன்னேற்றம் காண முடியுமா என்று பார்ப்போம். தொடக்கக் கட்ட ஆவணத்தில் உள்ள குறிப்பிட்ட வார்த்தைகள் குறித்து நிறையப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். எனவே இதற்குச் சில நாள்கள் ஆகும்,” என்று ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் திரு ரூபியோ தெரிவித்தார்.

