ஆர்டிஎஸ் ரயில் சேவை வந்தாலும் ஜோகூர் மக்களின் நெரிசல் தலைவலி தீராது

ஆர்டிஎஸ் ரயில் சேவை வந்தாலும் ஜோகூர் மக்களின் நெரிசல் தலைவலி தீராது

2 mins read
0c0ac6fb-6d8f-4514-b2dc-20a73a5cb595
சிங்கப்பூர்-ஜோகூர் இடையிலான ரயில் இணைப்பு, உச்ச நேரங்களில் 10,000 வரையிலான பயணிகளை ஏற்றிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: த ஸ்டார்
Google News Preferred Icon

ஜோகூர் பாரு: ஜோகூரில் உள்ள பலரது அன்றாட வாழ்க்கையில் போக்குவரத்து நெரிசல் தீராத தலைவலியாக பல ஆண்டுகள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோகூர்-சிங்கப்பூர் ஆர்டிஎஸ் ரயில் சேவை அடுத்த ஆண்டு தொடங்கும்போது நிலைமை மேலும் மோசமாகலாம் எனச் சொல்லப்படுகிறது.

காரணம், ரயில் சேவைகளை ஒட்டிய வசதிகள் இன்னும் தயாராகவில்லை. மக்கள், ரயில் நிலையங்களிலிருந்து பிற இடங்களுக்குச் செல்ல சிறந்த சாலைகள் அமைக்கப்படவில்லை. பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் இன்னும் விரிவுபடுத்தப்படவில்லை.

இந்த நிலையில் பொதுமக்கள் ரயில்களிலிருந்து இறங்கியதும் வீடு செல்ல சொந்த வாகனம் அல்லது வாடகை ஊர்திகளை நம்பியிருக்க வேண்டும்.

மே 22ஆம் தேதி இஸ்கந்தர் புத்திரியில் நடைபெற்ற இளையர் கலந்துரையாடலில் பங்கேற்ற ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ், போக்குவரத்து நெரிசல் மேலும் மோசமடைவதை எதிர்பார்க்கிறோம் என்று ஒப்புக்கொண்டார்.

“நீண்டகாலத் திட்டங்களைப் பொறுத்தவரை, மேம்பட்ட சுயேச்சை விரைவுப் போக்குவரத்து (ஏஅர்டி) திட்டத்திற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளதை நாங்கள் அறிகிறோம். இது, ஒரு நீண்டகாலத் தீர்வாக இருந்தாலும், 2030ஆம் ஆண்டின் தொடக்கத்தில்தான் அது தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

ஜோகூர் பாருவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இந்த ரயில் இணைப்பு, உச்ச நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு 10,000 பயணிகள் வரை ஏற்றிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான முஹம்மது ஸாலி ஷா, “ஆர்டிஎஸ் திட்டம் நிறைவடையும் தறுவாயில் இருக்கிறது, ஆனால் ஏஆர்டி எனும் போக்குவரத்துத் திட்டம் இன்னும் விவாதத்தில்தான் இருக்கிறது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“முக்கிய எல்லைத் தாண்டிய இணைப்பு திறக்கப்படுவதற்கு முன்பே நகரத்திற்குள் மேம்பட்ட போக்குவரத்து வசதிகளுக்குத் திட்டமிட்டிருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

பிப்ரவரியில் உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய ஜோகூர் போக்குவரத்து மற்றும் பொதுப்பணித்துறை நிர்வாக ஆலோசகரான ஃபஸ்லி முகமட் சாலே, “ஆர்டிஎஸ் சேவையுடன் இணைக்கப்பட்ட பேருந்து அல்லது டிராம் வசதி உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஜோகூர் பாருவில் பல ஆண்டுகள் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்,” என்று கூறியிருந்தார்.

2025 நவம்பரில் ஜோகூர் ஆட்சியாளரான இஸ்மாயிலும் ஜோகூரில் மோசமடைந்து வரும் போக்குவரத்து நெரிசல் குறித்துக் கவலை தெரிவித்திருந்தார்.

ஆர்டிஎஸ் சேவையுடன் இணைப்பை ஏற்படுத்தவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், ஜோகூர் பாரு ரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு ஏப்ரல் மாத இறுதியில் பட்டத்து இளவரசருமான அவர் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்
ரயில்ஆர்டிஎஸ்ஜோகூர் பாருபோக்குவரத்து