காத்மாண்டு: நேப்பாளத்தில் உள்ள எவரெஸ்ட் மலையில் ஆடவர் ஒருவருடைய சடலத்தை விளக்கப்படக் குழு ஒன்று கண்டெடுத்துள்ளது.
அந்தச் சடலம் 100 ஆண்டுகளுக்கு முன்பு எவரெஸ்ட் மலையில் மாயமான மலையேறியுடையதாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இந்தச் செய்தியை நேஷனல் ஜியாகிராஃபிக் சஞ்சிகை அக்டோபர் 11ஆம் தேதியன்று வெளியிட்டது.
பருவநிலை மாற்றம் காரணமாக இமய மலைப் பகுதிகளில் பனி உருகி வருகிறது.
இதனால், எவரெஸ்ட் மலையில் மாண்டு, உடல் கிடைக்காத மலையேறிகளின் சடலங்கள் தற்போது கண்களுக்குத் தட்டுப்படுவதாகக் கூறப்படுகிறது.
விளக்கப்படக் குழுவினர் கண்டெடுத்த உடல் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்ட்ரு இர்வின் என்பவருடையதாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
அவரது காலுறையில் ஏ.சி. இர்வின் எனும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
இவர், ஜார்ஜ் மெலோரி என்பவருடன் 1924ஆம் ஆண்டில் எவரெஸ்ட் மலையில் ஏறினார்.
தொடர்புடைய செய்திகள்
திரு மெலோரியின் உடல் 1999ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டது.
திரு இர்வின் காணாமல் போனபோது அவருக்கு 22 வயது.
அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த அவரது குடும்பத்தினர் மரபணுச் சோதனை செய்துகொண்டுள்ளனர்.
எவரெஸ்ட் மலையில் மலையேறிகள் ஏறுவது 1920களில் தொடங்கியது.
இதுவரை 3,000க்கும் மேற்பட்டோர் அங்கு மடிந்துவிட்டனர்.