கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் முன்னாள் உதவியாளரான முகம்மது யூசோஃப் ராவுத்தர் மீது போதைப்பொருள் கடத்தல், மாதிரி துப்பாக்கிகளை வைத்திருந்தது ஆகிய செயல்களில் ஈடுபட்டதாக சுமத்தபப்ட்டிருந்த இரண்டு குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுள்ளன.
32 வயது முகம்மது யூசோஃப் ராவுத்தர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அரசாரங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் நிரூபிக்கத் தவறியதாக நீதிபதி முகம்மது ஜமில் ஹுசைன் தீர்ப்பளித்தார். முகம்மது யூசோஃப் ராவுத்தர் இரண்டு மாதிரி துப்பாக்கிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, 305 கிராம் எடை கஞ்சாவை வைத்திருந்ததை அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் நிரூபிக்கவில்லை என்று நீதிபதி கூறினார்.
அந்தப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்ட கார், அதன் சாவி, அதன் இயக்கக் கருவி (remote control) ஆகியவை திரு யூசோஃபுக்குச் சொந்தமானவை என்று நீதிபதி குறிப்பிட்டார்.
“காவல்துறை நடவடிக்கை நடந்துகொண்டிருந்தபோது அவர் காருக்கு அருகில் இருந்ததையும் கார் கதவைத் திறந்ததையும் மறுக்க முடியாது. அதற்காக அந்த கார் குற்றஞ்சாட்டப்பட்டவரின் கட்டுப்பாட்டில் மட்டும்தான் இருந்தது என்றோ அவரே அந்த (மாதிரி) துப்பாக்கிகளையும் போதைப்பொருள்களையும் வைத்திருந்தார் என்றோ உறுதியாகக் கூற முடியாது,” என்று நீதிபதி ஜமில் வியாழக்கிழமை (ஜூன் 12) அரசுத் தரப்பு வாதத்துக்குப் பிறகு சுட்டினார்.
காவல்துறை நடவடிக்கையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவர் நடந்துகொண்ட விதம், காரில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களைப் பற்றி எதுவும் தெரியாதவரைப் போல்தான் இருந்தது என்றும் நீதிபதி ஜமில் சுட்டினார்.
கைதான பிறகு திரு யூசோஃப், திரு அன்வார் இப்ராகிம் தன்னைக் குற்றவாளியாகச் சித்திரித்ததாக் கூறினார் என்று நீதிபதி குறிப்பிட்டார். ஆனால், அந்த கோணத்தில் காவல்துறை எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் சொன்னார்.