கோலாலம்பூர்: மலேசியாவின் 1எம்டிபி கணக்கிலிருந்து பில்லியன் கணக்கான தொகையைக் களவாடுவதற்கான சந்திப்பின்போது குடும்பத்தார், நண்பர்கள் இருந்திருப்பர் என்று சொல்வது நடைமுறைக்குப் புறம்பானது என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 3) நீதிமன்றத்தில் கூறினார்.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த இருவர், மலேசியாவிலிருந்து தப்பியோடிய ஜோலோ என்றழைக்கப்படும் வர்த்தகர் லோ தெய்க் ஜோ ஆகியோருடன் ‘யோட்’ (yacht) படகில் அதிகாரபூர்வமற்ற முறையில் பிற்பகல் தேநீர் விருந்தில் ஈடுபட்டதாக நஜிப் சொன்னார். சவூதி அரேபிய இளவரசர் துர்க்கியின் அழைப்பையொட்டி தேநீர் விருந்து இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
தனது மனைவி ரோஸ்மா மன்சூர், பிள்ளைகள் நோர் அஷ்மான் ரசாக், நூர்யானா நஸ்வா, ரோஸ்மாவின் முதல் கணவருக்குப் பிறந்த ரிஸா ஷாஹ்ரிஸ் அப்துல் அஸிஸ் ஆகியோருடன் 2009ஆம் ஆண்டில் பிரான்சின் தெற்குப் பகுதியில் தனிப்பட்ட விடுமுறையில் தாங்கள் இருந்ததாகவும் நஜிப் குறிப்பிட்டார். தனது குடும்பத்தாரைத் தவிர நண்பர் புஸ்டாரி யூசுஃப், அவரின் பிள்ளைகள் ஆகியோரும் தங்களுடன் விடுமுறையில் கலந்துகொண்டனர் என்றும் செவ்வாய்க்கிழமையன்று தனது சாட்சி வாக்குமூலத்தை வாசிக்கும்போது அவர் தெரிவித்தார்.
யாரெல்லாம் இருந்தனர் என்ற விவரத்தைக் கொண்டே அது தனிப்பட்ட விடுமுறைதான் என்பதைக் கணிக்க முடியும் என்று நஜிப் விவரித்தார்.

