நியூசிலாந்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மீது திருட்டுக் குற்றச்சாட்டு

1 mins read
c0480b79-0ee0-4a7f-8d22-169c555d6b7c
நியூசிலாந்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோல்ரீஸ் காஹ்ரமன் பிப்ரவரி 1ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: கோல்ரீஸ் காஹ்ரமன் எம்பி/ஃபேஸ்புக்

வெலிங்டன்: நியூசிலாந்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பசுமைக் கட்சியின் நீதித்துறை பேச்சாளருமான கோல்ரீஸ் காஹ்ரமன் திருடியதாக ஜனவரி 17ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டார்.

அவர் அதற்கு முந்திய நாள் தமது எம்.பி. பதவியிலிருந்து விலகினார்.

ஆடை கடை ஒன்றிலிருந்து திருடியதாக வந்த செய்தி அறிக்கைகளைத் தொடர்ந்து நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அகதியான காஹ்ரமன், மனநலக் காரணங்களைக் குறிப்பிட்டு பதவி விலகினார்.

காவல்துறையினர் காஹ்ரமனை அவரது வீட்டில் விசாரித்தனர். அதன் பின்னர் விசாரணையின் ஒரு பகுதியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்தனர்.

காவல்துறையினர் காஹ்ரமனின் பெயரைக் குறிப்பிட்டு அறிக்கையை வெளியிடவில்லை.

“இரண்டு திருட்டுக் குற்றச்சாட்டுகளுக்காக ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலையாகும்படி 43 வயது மாது ஒருவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,” என்று காவல்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இருப்பினும், நியூசிலாந்து ஊடகங்கள் அந்த மாதை காஹ்ரமன் என்று அடையாளப்படுத்தியுள்ளன.

அவர் பிப்ரவரி 1ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்