ஹனோய்: வியட்னாமில் முன்னாள் வர்த்தக, தொழில் துணையமைச்சருக்கு ஆறு ஆண்டு சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) விதிக்கப்பட்டுள்ளது. சூரியசக்தி மேம்பாட்டுத் திட்டத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய வழக்கில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது.
2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றத்தை முழுமையாக நீக்க வியட்னாம் திட்டமிட்டுள்ளது. எரிசக்திக்கான தேவைகளைக் காற்றாலைகள், சூரியசக்தி மூலம் எட்ட அது முயல்கிறது.
இந்நிலையில், தெற்கில் உள்ள நின் துவான் மாநிலத்தில் உள்ள சூரியசக்தி ஆலை தேசிய மின்சார நிறுவனத்துக்கு எரிசக்தியை விற்பனை செய்வதற்குச் சாதகமாக வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஹுவாங் குவோக் வூங், 62, கையூட்டு வாங்கியதை ஒப்புக்கொண்டார்.
2015 முதல் 2020ஆம் ஆண்டு வரை வர்த்தக, தொழில் துறைக்குத் துணையமைச்சராக இருந்த அவர், வியட்னாம் மின்சார நிறுவனத்துக்கு 2012 முதல் 2015ஆம் ஆண்டுவரை தலைமை தாங்கினார்.
2018க்கும் 2020க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் வியட்னாம் மின்சார நிறுவனம் நின் துவான் மாநிலத்தில் உள்ள மூன்று சூரியசக்தி ஆலைகளிலிருந்து 154 மில்லியன் டாலர் மதிப்பிலான சூரியசக்தியை வாங்கியுள்ளது.
கையூட்டு வாங்கியதை ஒப்புக்கொண்ட வூங், தமது குடும்பம் அதைத் திரும்பக் கொடுத்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
“நான் அரசாங்கப் பணியில் இருந்தபோது பல இழப்புகளுக்குக் காரணமான இந்தத் தவற்றைச் செய்தேன். அதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டு அரசாங்கத்துக்கு அந்தத் தொகையைத் திரும்பத் தருகிறேன்,” என்று நீதிமன்றத்தில் திரு வூங் சொன்னார்.
வழக்குடன் தொடர்புடைய மேலும் 11 எரிசக்தி, வரித் துறை அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர். அவர்களுக்குப் பணி நீக்கம் உள்பட மூவாண்டு சிறைத் தண்டனை முதல் ஆறாண்டு சிறைத் தண்டனை வரை கொடுக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வியட்னாம் எரிசக்தி நிறுவனத்துக்குச் சூரியசக்தியை விற்றதன் மூலம் பயனடைந்த மூன்று எரிசக்தி ஆலைகள் 40 மில்லியன் டாலர் இழப்பீட்டை நிறுவனத்துக்குத் திரும்பத் தரும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.