அன்வாரின் கூட்டணிக்கு மிரட்டலாக உருவெடுத்துள்ள தேர்வு

2 mins read
722b0ab9-04f8-418d-b3b5-dfbb6fda0825
பொதுப் பல்கலைக்கழகங்கள், சேவைத் துறை ஆகியவற்றுக்குள் நுழைவதற்கு ஐக்கியத் தேர்வுச் சான்றிதழைப் பயன்படுத்த வழிசெய்யப்படும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்திருந்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு ஐக்கியத் தேர்வுச் சான்றிதழை அங்கீரிப்பதன் தொடர்பில் நெருக்குதல் அதிகரித்துள்ளது.

பொதுப் பல்கலைக்கழகங்கள், சேவைத் துறை ஆகியவற்றுக்குள் நுழைய அத்தேர்வைப் பயன்படுத்துவதற்கு வழிசெய்யப்படும் என்று அவர் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்திருந்தார். இன ரீதியாக அது அவரின் நிர்வாகத்திற்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

அந்தத் தேர்வு, ‘ஏ’ நிலைத் தேர்வுக்கு நிகரானது. மலேசியாவில் சீன மொழி வழிக் கல்வியை வழங்கும் சுயேச்சை உயர்நிலைப் பள்ளிகளில் அத்தேர்வு நடைமுறையில் உள்ளது.

ஜனநாயகச் செயல் கட்சி, அந்தத் தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது.

அதனையடுத்து, அதுகுறித்த பேச்சு பரவிவருகிறது. பூர்வீகச் சீனச் சிறுபான்மை இனத்தவரின் ஆதரவைப் பெறுவதற்காக, அக்கட்சி அந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சென்ற மாதம் (நவம்பர் 2025) சாபா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஜனநாயகச் செயல் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது.

திரு அன்வாரின் ஒற்றுமை அரசாங்கக் கூட்டணியில் ஆக அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சி அது.

தேர்வை அங்கீகரிப்பது குறித்து ஜனநாயகச் செயல் கட்சி மலேசியப் பிரதமருடன் பேச்சு நடத்தும் என்று கட்சியின் துணைத் தலைவர் ஙா கோர் மிங் இம்மாதம் 7ஆம் தேதி கூறியிருந்தார்.

அடுத்த ஆறு மாதத்தில் சீர்திருத்த நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளத் திரு அன்வாருடன் மிகவும் அணுக்கமாய்ப் பணியாற்றப் போவதாக அவர் சொன்னார்.

ஆறு மாத அவகாசத்திற்குப் பிறகு முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றால் ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து விலகுமாறு கட்சியின் தலைமைத்துவக் கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தக் கூட்டம், இம்மாதம் முதல் தேதி நடைபெற்றது.

மலேசியாவில் வசிக்கும் பூர்வீகச் சீனச் சமூகத்தினர் தேர்வை அங்கீகரிக்கும்படி நீண்ட காலமாகவே குரல் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் மலாய்-முஸ்லிம் சமூகத்தினரில் ஏராளமானோர் அது தேவையற்றது என்றும் நாட்டுப்பற்றுக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது என்றும் கருதுகின்றனர்.

திரு அன்வாரின் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்குப் பல்லாண்டாக ஆதரவளித்துவரும் சீன வாக்காளர்களுக்கும் பெரிக்கத்தான் நேசனலுக்கு அதிக விகிதத்தில் ஆதரவளிக்கும் மலாய்க்காரர்களுக்கும் இடையில் நடுநிலையைக் காணவேண்டிய சூழலில் இருக்கிறார் மலேசியப் பிரதமர்.

1961ஆம் ஆண்டு சீன சுயேச்சைப் பள்ளிகள் தேசியப் பாடத்திட்டத்திலிருந்து விலகிய பிறகு, சீரான மதிப்பீட்டு முறைக்காக ஐக்கியத் தேர்வுச் சான்றிதழ் உருவாக்கப்பட்டது.

இன்றைய நிலையில் அந்தத் தேர்வு அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஆனால், மலேசியாவில் மத்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களிலும் பொதுச் சேவைத் துறைகளிலும் அது அங்கீகரிக்கப்படுவதில்லை.

குறிப்புச் சொற்கள்