அபுதாபி: ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் கோடைக்காலத்தில் மிதமிஞ்சிய வெப்பத்தை எதிர்கொள்கிறது.
முன்னெப்போதும் இல்லாத வசந்தகாலத்தை இவ்வாண்டு அது சந்தித்தது. தேசிய வானிலை நிலையம் அந்தத் தகவலை வெளியிட்டது.
உலகெங்கும் பல நாடுகளில் வெப்பநிலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ள வேளையில் வளைகுடா நாட்டிலும் கதிரவனின் வீச்சு குறையவில்லை. தொழிற்புரட்சிக் காலத்திற்கு முன்புடன் ஒப்பிடுகையில் உலக வெப்பநிலை சென்ற ஆண்டு ஒன்றரை விழுக்காட்டுக்கும் மேல் கூடியது. ஏப்ரல், மே மாதங்களில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் வெப்பம் வெகுவாக அதிகரித்தது.
சுவெய்ஹான் நகரில் ஆகஸ்ட் முதல் தேதி, வெப்பநிலை 51.8 டிகிரி செல்சியசாகப் பதிவானது. 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு அதுவே ஆக வெப்பமான நாள். சுவெய்ஹான் வரலாற்றில் மிகவும் சூடான நாளாகப் பதிவான 2002 ஜூலையைவிட அது சற்றுக் குறைவு. அப்போது வெப்பநிலை 52.1 டிகிரி செல்சியசாக இருந்தது.
ஜூன், ஜூலை மாதங்களில் நாட்டின் உட்புறப் பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியசைத் தாண்டியது. கரையோர நகரங்களான துபாய், அபுதாபி போன்றவற்றில் வெப்பநிலை கிட்டத்தட்ட 45 டிகிரி செல்சியசாக இருந்தது. கோடையின் எஞ்சிய காலத்திலும் வெப்பம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்று வானிலை நிலையம் கூறுகிறது.
உச்ச நேரங்களில் வெளிப்புறங்களில் இருப்பதைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.