கோத்தா பாரு: உலகளாவிய டீசல் விலைகளில் ஏற்பட்ட கடுமையான உயர்வைத் தொடர்ந்து, மானிய டீசல் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கான மாதாந்தர ஒதுக்கீடு, முன்பு சுமார் 700 மில்லியன் ரிங்கிட்டாக இருந்ததை விட, மார்ச் மாதத்தில் 2.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்து, கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகளாவிய டீசல் விலைகளின் உயர்வால் இந்தச் செலவின அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் அர்மிசான் முகமது அலி கூறினார்.
“உதாரணமாக, பிப்ரவரி 26 ஆம் தேதி ஒரு பேரல் 93 அமெரிக்க டாலராக இருந்த உலகளாவிய டீசல் விலை மார்ச் 31 ஆம் தேதி 239 அமெரிக்க டாலராக உயர்ந்து 158 விழக்காடு அதிகரிப்பைக் காட்டுகிறது.
“தற்போதைய விலை ஏற்றத்தைத் தொடர்ந்து வரும் கணிப்புகளின் அடிப்படையில், மானிய டீசல் கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவைப்படும் மாதாந்தர ஒதுக்கீடு 2.2 பில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025ஆம் ஆண்டில் ஆண்டுதோறும் செலவிடப்படும் 3.45 பில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில் குறைவு,” என்று அவர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) அன்று, கோத்தா பாருவில் முக்கியப் பங்குதாரர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
மத்திய கிழக்கு மோதலைத் தொடர்ந்து ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் விலைகள் உயர்ந்த போதிலும், இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியத் திட்டத்தைத் தொடர்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று திரு அர்மிசான் கூறினார்.
மானிய டீசல் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், 10 வகை பொது நிலப் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் 23 வகை சரக்குப் போக்குவரத்து வாகனங்கள் உட்பட, மொத்தம் 33 வகையான வாகனங்கள் மானிய விலையில் டீசல் பெறத் தகுதி பெற்றுள்ளன.
“பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், பொது நிலப் போக்குவரத்து வாகனங்களுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு 1.88 ரிங்கிட் என்ற விலையிலும், சரக்குப் போக்குவரத்து வாகனங்களுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு 2.15 ரிங்கிட் என்ற விலையிலும் மானிய விலையில் டீசல் பெறலாம்,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
எரிபொருள் விநியோகத்தை முன்கூட்டியே கொள்முதல் செய்வதால் ஏற்படும் சுமை குறித்து பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நிதி அமைச்சுடன் இவ்விவகாரம் குறித்து அமைச்சு விவாதிக்கும் என்று திரு அர்மிசான் கூறினார்.
“உரிமையாளர்கள் பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறையை விரைவுபடுத்தி, அவற்றை உடனடியாகப் பெறுவதற்கு நிதி அமைச்சுடன் விவாதிப்பதும் நாங்கள் பரிசீலித்து வரும் அணுகுமுறைகளில் ஒன்றாகும்.
“உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் அனைத்துத் தரப்பினரும் தங்கள் செயல்பாடுகளைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில், உரிமையாளர்கள் தங்களது சொந்த மாற்று ஏற்பாடுகளைச் செய்வார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறியதாக பெர்னாமா தெரிவித்தது.

