ஸ்ட்ராஸ்பர்க்: பிரான்சின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள லாலிக் அரும்பொருளகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) அதிகாலை நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் ஏறத்தாழ 4 மில்லியன் யூரோ மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டன.
அரும்பொருளகத்துக்குள் புகுந்த கொள்ளையர்கள், நகைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு நேரடியாகச் சென்று கிட்டத்தட்ட 20 நகைகளைத் திருடிச் சென்றனர். கொள்ளைச் சம்பவம் நடந்தபோது எச்சரிக்கை மணி ஒலித்தபோதிலும், பாதுகாப்பு நிறுவனத்தினர் தங்களது சரிபார்ப்புகளை முடிப்பதற்குள் கொள்ளையர்கள் தப்பிவிட்டனர். அதன் பின்னர் அங்கு சென்ற துப்புரவுப் பணியாளர் ஒருவர் மூலம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, அரும்பொருளகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தற்போது காவல்துறையினர் அங்குள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் புகழ்பெற்ற லூவ்ரே அரும்பொருளகத்தில் பகல் நேரத்தில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, பிரான்ஸ் அரும்பொருளகங்களின் பாதுகாப்பு தற்போது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.
லூவ்ரே அரும்பொருளகத்திலிருந்து திருடப்பட்ட நகைகளின் மதிப்பு 102 மில்லியன் அமெரிக்க டாலர் (S$132 மில்லியன்).

