ஜகார்த்தா: இந்தோனீசியாவில் இவ்வாண்டு பிப்ரவரியில் நடந்த தேர்தலில் வாக்களித்தவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர் பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தது தெரியவந்துள்ளது.
இந்தோனீசிய அதிகாரத்துவப் புள்ளிவிவரத்துறை வாரியம் அண்மையில் நடத்திய கருத்தாய்வில், வாக்களிக்கப் பணம் பெற்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய நாடான இந்தோனீசியாவில் ஊழலைச் சகித்துக்கொள்ளும் போக்கும் அதிகரித்து வருவதையும் அந்த ஆய்வறிக்கை காட்டுகின்றது.
இதனையடுத்து, லஞ்ச, ஊழலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்காவிடில் அது மேலும் மோசமடையலாம் என்றும் வறுமையும் போதிய கல்வியின்மையும் அப்பிரச்சினையை இன்னும் அதிகப்படுத்திவிடும் என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த தேர்தலின்போது குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி, கிட்டத்தட்ட 46% விழுக்காடு வாக்காளர்களுக்குப் பொருள் அல்லது பணம் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தோனீசியாவின் ஊழல் தடுப்புக் குறியீடும் கீழிறங்கியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் 3.93ஆக இருந்த அக்குறியீட்டெண், இப்போது 3.85ஆகக் குறைந்துள்ளது.
அக்குறியீட்டெண் ஐந்தாக இருந்தால் லஞ்ச, ஊழலை வலிமையாக எதிர்ப்பதாகவும் பூஜ்ஜியமாக இருந்தால் அதனைப் பெரிதும் ஏற்றுக்கொள்வதாகவும் பொருள்.
லஞ்ச, ஊழல் குறியீட்டெண்ணை 4.1க்கு உயர்த்த வேண்டுமென்பது இந்தோனீசிய அரசாங்கத்தின் இலக்கு.
தொடர்புடைய செய்திகள்
இந்தோனீசியாவில் ஊழல் ஏற்றுக்கொள்ளப்படுவதையும் லஞ்சம் தர வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதையும் இந்த ஆய்வு முடிவுகள் காட்டுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார், ஜெண்டரல் அஹ்மத் யானி பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் யோகனஸ் சுலைமான்.
“வாக்குகளைப் பெற வேண்டுமெனில், வேட்பாளர்கள் பணம் தர வேண்டியுள்ளது. இது பிரச்சினையா என்றால் பிரச்சினைதான், ஆயினும், மக்கள் அதற்குப் பழகிவிட்டனர். அதனால்தான் ஊழல் வேரூன்றிவிட்டதாகப் பார்க்கப்படுகிறது,” என்றார் அவர்.
இந்தோனீசியச் சட்டத்தின்படி, வாக்கிற்குப் பணமோ பொருளோ தருவது சட்டவிரோதம். அதனை மீறுவோருக்குச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

