பிரெஞ்சு மதுபானக்கூடத்தில் வெடிப்பு: 12 பேர் காயம்

1 mins read
ca9b98a6-0609-49bb-8672-ec3bb1570981
சம்பவ இடத்தைச் சுற்றி அதிகாரிகள் தடுப்பு போட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். - படம்: ஏஎஃப்பி

கிரேனொபல்: பிரான்சின் தென்கிழக்கு நகரமான கிரேனொபல் நகரில் உள்ள மதுபானக்கூடத்தில் கையெறி குண்டு ஒன்று புதன்கிழமை (பிப்ரவரி 12) இரவு வெடித்தது. அதில் 12 பேர் காயம் அடைந்தனர்.

அடையாளம் தெரியாத ஒருவர் மதுபானக்கூடத்துக்குள் கையெறி குண்டை வீசிவிட்டு எதுவும் கூறாமல் அங்கிருந்து ஓடிவிட்டதாக சம்பவ இடத்தில் கூடிய செய்தியாளர்களிடம் பிரெஞ்சு அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார். சம்பவ இடத்தைச் சுற்றி அதிகாரிகள் தடுப்பு போட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடிப்பில் காயமடைந்தோரில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நிகழ்ந்தபோது மதுபானக்கூடத்தில் வாடிக்கையாளர்கள் பலர் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

தாக்குதலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

ஆனால் அது பயங்கரவாத தாக்குதல் அல்ல என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

பழிவாங்குவதற்காகக் கையெறி குண்டு வீசப்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இத்தாக்குதலுக்குத் தொடர்பு இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

அந்தக் கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

தாக்குதலுக்குப் பிரெஞ்சுத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்