தாய்லாந்தில் பள்ளிக்கு வெளியே குண்டுவெடிப்பு; காவல்துறையினர் இருவர் உட்பட மூவர் காயம்

தாய்லாந்தில் பள்ளிக்கு வெளியே குண்டுவெடிப்பு; காவல்துறையினர் இருவர் உட்பட மூவர் காயம்

1 mins read
0104aa2b-e2e2-48fd-a198-7884e9749c30
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சாலையோரம் பக்கவாட்டில் சாய்ந்து கிடக்கும் காவல்துறை வாகனம். - படம்: யாலா பொதுத் தொடர்பு அலுவலகம்

பேங்காக்: தாய்லாந்தின் யாலா மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றுக்கு வெளியே, கிளர்ச்சியாளர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோரால் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குண்டு செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) காலை வெடித்ததில் மூவர் காயமடைந்தனர்.

சிங்கப்பூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 8.35 மணியளவில் அப்பள்ளிக்கு முன்னால் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அப்பகுதியில் ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள், மாணவர்கள் பாதுகாப்பாக வந்து செல்வதை உறுதிசெய்யும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.

இதில் காவல்துறை அதிகாரிகள் இருவரும் பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்ததாக முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களுக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளித்த பாதுகாப்புப் படையினர், பின்னர் அவர்களை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதியும் மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் பொருட்டும் அப்பகுதியை அதிகாரிகள் முழுமையாகத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு அதிகாரிகளும் தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையிட்டு, ஆதாரங்களைச் சேகரித்து வந்தனர்.

குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்