தோக்கியோ: ஜப்பானின் ஒக்கினாவா மாநிலத்திலுள்ள அமெரிக்க ஆகாயப்படைத் தளத்தில் குண்டுகள் கொண்டுள்ள இடம் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டதில் நான்கு பேர் காயமுற்றனர்.
இருப்பினும், காயமுற்றோரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று ஜப்பானிய தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஒக்கினாவாவின் தெற்குப் பகுதியிலுள்ள கடேனா ஆகாயப் படைத்தளத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
ஜப்பானின் தற்காப்புப் படையினர் அந்தக் குண்டுகளிலிருந்து துருக்களை அகற்றிக்கொண்டிருந்த நேரத்தில் இச்சம்பவம் நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
வெடிப்பில் காயமடைந்த ராணுவ வீரர்கள் நால்வர் மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்லப்பட்டனர்.
இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கப் படைகள் முன்னேறுவதைத் தாமதப்படுத்த ஜப்பான், ஒக்கினாவா மாநிலத்தைப் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தியது.
கடந்த 1945ஆம் ஆண்டு நடந்த ஒகினாவா போரில் அங்குள்ள பொதுமக்களில் கால் பங்கிற்கும் அதிகமானோர் உயிர் இழந்தனர்.
அந்நாட்டில் அமெரிக்க ஆதிக்கம் 1972ஆம் ஆண்டு நிறைவடைந்தபோதும் அமெரிக்காவின் ராணுவத் தளங்கள், ஒப்பந்தம் ஒன்றின்படி தொடர்ந்து இயங்குகின்றன.
தொடர்புடைய செய்திகள்
ஜப்பானில் தற்போது செயல்பட்டுவரும் அமெரிக்க ராணுவத் தளங்களில் 70 விழுக்காடு ஒக்கினாவாவில் உள்ளன.
அத்துடன், 50,000க்கும் அதிகமான அமெரிக்க ராணுவ வீரர்களும் அத்தளங்களில் பணிபுரிகின்றனர்.

