இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இந்த மாதம் திருப்பிச் செலுத்தவேண்டிய $2 பில்லியன் கடனுக்கான காலக்கெடுவை ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் நீட்டித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப், செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) இத்தகவலை வெளியிட்டார்.
பாகிஸ்தானுக்குத் தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் அதிபர் ஷேக் முகமது பின் ஸையது அல் நஹ்யாவைத் தாம் ஞாயிற்றுக்கிழமை சந்தித்ததாக அவர் கூறினார்.
“தனிப்பட்ட சந்திப்பின்போது $2 பில்லியன் கடனைச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கிறோம் என்று அவர் கூறினார்,” என்று பிரதமர் ஷரிஃப் செய்தியாளர்களிடம் கூறினார்.
அந்தச் செய்தியாளர் சந்திப்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
மேலும், முக்கியமான முதலீட்டுத் திட்டங்களில் சில பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்யுமாறு தாம் கேட்டுக்கொண்டதாகவும் பாகிஸ்தானுக்கு அது உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டதாகவும் திரு ஷரிஃப் கூறினார்.
“ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் இந்த முதலீட்டில் கடப்பாடு கொண்டிருப்பதாக அதிபர் கூறினார். இரு நாடுகளும் சகோதரத்துவப் பிணைப்புகளைக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்,” என்று பாகிஸ்தான் பிரதமர் சொன்னார்.
முன்னதாக, நெருக்கடியில் தத்தளித்த பாகிஸ்தானுக்குக் கடன் வழங்கும் உடன்படிக்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு அனைத்துலகப் பண நிதியம் சில நிபந்தனைகளை விதித்திருந்தது. அவற்றில் முக்கியமானது, வேறு தரப்பிலிருந்து நிதியுதவி பெறுவது ஆகும்.
தொடர்புடைய செய்திகள்
வரும் பிப்ரவரி மாதம், பாகிஸ்தானுக்கான $7 பில்லியன் கடன் திட்டத்தை நிதியம் மறுஆய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.