சோல்: கர்ப்பக் காலத்தின் 11வது வாரத்திற்கு முன் கருச்சிதைவு அல்லது கருவிலேயே குழந்தை இறப்பது போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பை நீட்டிப்பதாகத் தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது ஐந்து நாள்களாக இருக்கும் இந்த விடுப்பைப் பத்து நாள்களாக அந்நாட்டு அரசாங்கம் நீட்டித்துள்ளது.
தொழிலாளர்களின் நலனில் தொடர்புடைய குறிப்பிட்ட சில சட்டங்களான சமமான வேலை வாய்ப்புச் சட்டம், வேலைவாய்ப்பு காப்புறுதிச் சட்டம், தொழிலாளர் தரநிலைச் சட்டம் ஆகியவற்றில் சில திருத்தங்களைச் செய்துள்ளதாக அந்நாட்டு வேலைவாய்ப்பு, தொழிலாளர் அமைச்சு புதன்கிழமையன்று (நவம்பர் 20) அறிவித்தது.
மேலும், சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து டிசம்பர் 30ஆம் தேதி வரை தென்கொரிய மக்கள் கருத்துரைக்கலாம் என அந்நாட்டு அமைச்சு தெரிவித்தது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி நடைமுறைக்கு வரும் இந்தச் சட்டத் திருத்தம் நாட்டின் குறைந்துவரும் பிறப்பு விகிதத்தைச் சமாளிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஒரு பகுதி என அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறினார்.

