மணிலா: வெளியுறவுக் கொள்கைகளின் மூலமாக ஆசியான் நாடுகள் உலக அளவில் அமைத்துள்ள பங்காளித்துவம் அந்தக் கூட்டமைப்பின் மிக முக்கியமான வலுசேர்க்கும் அங்கமாக விளங்குகிறது என்று வெளியுறுவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
“உலக நாடுகளுடனான நல்லுறவு, இந்த வட்டாரத்தையும் கடந்து, நமது வளப்பகிர்வை மேம்படுத்த உதவுவதோடு, மீள்திறனை வலுப்படுத்தி, அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் பங்களிக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.
ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு பிலிப்பீன்சில் ஜூலை 20 முதல் 24ஆம் தேதிவரை நடந்துவருகிறது. அதன் அங்கமாக பல நாடுகளுடன் நடக்கும் துணை மாநாடுகளுக்குப் பிறகு அமைச்சர் விவியன் புதன்கிழமை (ஜூலை 22) தமது கருத்துகளை முன்வைத்தார்.
ஆசியான் பங்காளிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைகள், மின்னிலக்கப் பொருளியல், பசுமைக்கான மாற்றம், விநியோகத் தொடர் மீள்திறன், மக்கள் தொடர்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஆசியான்-ஜப்பான் பேச்சுவார்த்தைக்கும் நல்லுறவுக்கும் பொறுப்பு வகிக்கும் சிங்கப்பூரின் ஒருங்கிணைப்பாளராகவும் திரு பாலகிருஷ்ணன் செயலாற்றுகிறார். அவர் ஜப்பானின் வெளியுறவு அமைச்சரான மொத்தேகி தோஷிமிட்சுவுடன் இணைந்து ஆசியான் அமைச்சர்நிலைப் பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை தாங்கினார்.
அப்பேச்சுவார்த்தையில் ஜப்பானும் ஆசியானும் நடைமுறைக்கேற்ற ஒத்துழைப்பை இருதரப்பிலும் நல்கி, நடப்பில் உள்ள முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவத்துவத்தை வலுப்படுத்த மறுவுறுதி பூண்டன.
இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் நிலவிவரும் போட்டித்தன்மைக்கு இடையே பெரும்பொருளியலைக் கொண்ட முக்கியமான நாடுகளுடன் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக் கூட்டங்களை தனிப்பட்ட முறையில் நடத்திவருகின்றனர்.

