தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பருவநிலை மாற்றத்தால் உலகின் பல பகுதிகளிலும் வெப்பநிலை அதிகரிப்பு

2 mins read
44858cea-6ff4-4ef8-86ca-29b24c157192
படம்: ராய்ட்டர்ஸ் -

அனல் கக்கும் கோடைக்கால வெப்பத்திலிருந்து மாணவர்களையும் பள்ளிக்கூட ஊழியர்களையும் பாதுகாக்க பிலிப்பீன்ஸ் கல்வித் துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.

நாளை (திங்கட்கிழமை) முதல் நேரடி வகுப்புகளை பள்ளி நிர்வாகங்கள் தள்ளி வைக்க அதில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, அதிக வெப்பத்தைச் சமாளிக்கும் வசதிகள் எதுவும் அரசாங்கப் பள்ளிகளில் இல்லை என்று ஏசிடி எனப்படும் அக்கறையுள்ள ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்து இருந்தது.

கொளுத்தும் வெயிலால் மாணவர்கள், ஆசிரியர்களின் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டால் நேரடி வகுப்புகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டு மெய்நிகர் கற்பித்தல் முறைக்கு மாறிக்கொள்ளும்படி பள்ளி முதல்வர்களுக்கு நினைவூட்டப்பட்டு உள்ளதாக கல்வித் துறைப் பேச்சாளர் மைக்கல் புவா கூறினார்.

மலேசியாவிலும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்துவரும் வேளையில், அதிகமாக தண்ணீர் குடித்து, வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளும்படி அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்சியாக மூன்று நாள்களாக சராசரி அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசைத் தாண்டினால், வெப்ப அலை ஏற்படுவதாகக் கருதப்படும் என்று சாபா சுகாதாரத் துறை கூறியது.

பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடைக்கால வெப்பம் நிலவும்.

வெளிப்புறங்களில் குடை அல்லது தொப்பியைப் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தி இருக்கிறது.

வெளிர் நிறமுடைய, இலேசான உடைகளையும் அணியும்படியும் 'கெஃபேன்', மதுபானங்கள் உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ளும்படியும் ஊக்குவிக்கப்படுகிறது.

அன்றாட வானிலையைப் பொதுமக்கள் தொடர்ந்து கண்காணிக்கும்படியும் சுகாதார, பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி தங்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கிலும் மற்ற பகுதிகளிலும் கடும் வெப்பம் காரணமாக வெளியே செல்ல வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேங்காக்கில் நேற்று வெப்பநிலை 42 டிகிரி செல்சியசை எட்டியது.

பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று வெப்பநிலை 40.6 டிகிரி செல்சியசைத் தொட்டது. ஐம்பத்து எட்டு ஆண்டுகளில் இந்த வெப்பநிலைதான் ஆக அதிகம் எனக் கூறப்படுகிறது.

ஆசியா, தென்கிழக்காசிய நாடுகளில் இவ்வாண்டு வெயில் வாட்டிவதைப்பதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்