தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் கடும் வறுமை 0.09 விழுக்காடாகச் சரிவு: அன்வார்

2 mins read
d6a1464b-1e3e-48f2-b0ee-9bb801c03e90
மலேசியாவில் கடும் வறுமை தொடர்பான புள்ளிவிவரங்களைப் பிரதமர் அன்வார் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். - படம்: மலாய் மெயில் / இணையம்

கோலாலம்பூர்: மலேசியாவில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு ஆதரவளிப்பதற்கான பல்வேறு உதவித் திட்டங்களுக்கு அரசாங்கம் இவ்வாண்டு கிட்டத்தட்ட 20 பில்லியன் ரிங்கிட் (6.193 பில்லியன் வெள்ளி) ஒதுக்கியிருக்கிறது என அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

அதன் மூலம் மலேசியாவின் கடும் வறுமை விகிதம் வெறும் 0.09 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது என்றும் திரு அன்வார் குறிப்பிட்டுள்ளார். திரு அன்வார் நாடாளுமன்றத்தில் இவ்வாறு கூறினார்.

“இ-காசி (மலேசிய தேசிய வறுமை புள்ளிவிவர வங்கி) புள்ளிவிவரங்களின்படி கடும் வறுமைக்கு ஆளாகியிருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தொடர்ந்து அப்பிரிவில் இருப்பவர்களை எங்களால் கவனித்துக்கொள்ள முடியும்,” என்று திரு அன்வார் விவரித்தார்.

மலேசிய அரசாங்கம் பொதுவாக வறுமையை எப்படிக் கையாள்கிறது என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்டதற்கு அவர் பதிலளித்ததாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மலேசியாவின் கடும் வறுமை விகிதம் 0.2லிருந்து 0.09 விழுக்காட்டுக்குக் குறைந்திருப்பதாக புதன்கிழமை (அக்டோபர் 29) நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்படியென்றால் நாடு முழுவதும் சுமார் 7,000 மக்கள் மட்டுமே கடும் வறுமைக்கு ஆளாகியிருக்கின்றனர் என்று நிதி அமைச்சர் அமீர் ஹம்ஸா அஸிஸான் குறிப்பிட்டார்.

பல்வேறு திட்டங்கள், முயற்சிகளின் மூலம் அரசாங்கம் எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளே இந்த முன்னேற்றத்துக்குக் காரணம் என்று அவர் சொன்னார்.

“மூன்று மாநிலங்களில்தான் கடும் வறுமைக்கு ஆளாகியிருக்கும் மக்கள் இன்னமும் இருக்கின்றனர். விகிதத்தைக் குறைக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

“எங்களின் முயற்சிகளுக்கு ஏற்ப பன்முனைப்பு வறுமைக் குறியீட்டை (எம்பிஐ) நாங்கள் அறிமுகப்படுத்தினோம். அதனால் நிதி சார்ந்த அம்சங்களை மட்டும் நாங்கள் கவனிக்கவில்லை, ஒட்டுமொத்தமாக மக்களுக்கு இருக்கும் வசதிகளையும் பார்க்கிறோம்.

“எங்களுக்குக் கிடைக்கும் புள்ளிவிவரங்களில் பல நல்ல முன்னேற்றங்கள் காணப்படுகின்றன,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்