சிங்கப்பூர் எஃப்1 கார் பந்தயம் நெருங்குகையில், ஜோகூர் பாருவில் உள்ள ஹோட்டல்கள் பெரும் எண்ணிக்கையிலான எஃப்1 ரசிகர்களை ஈர்க்கத் தயாராகி வருகின்றன.
“சிங்கப்பூரில் எஃப்1 கார் பந்தயம் நடைபெறும் காலகட்டத்தில் அங்குள்ள ஹோட்டல் கட்டணங்கள் பேரளவில் உயரும். எனவே, கட்டுப்படியான விலையில் இருக்கும் ஜோகூர் பாரு ஹோட்டலில் தங்க பலர் முடிவெடுப்பதுண்டு,” என்று மலேசிய ஹோட்டல்கள் சங்கத்தின் ஜோகூர் கிளைத் தலைவர் ஐவன் டியோ தெரிவித்தார்.
சிங்கப்பூர் எஃப் 1 கார் பந்தயம் நெருங்கும்போது மலிவான தங்குமிடங்களைத் தேடும் ரசிகர்களிடமிருந்து முன்பதிவுகளும் அதிகரிக்கும் என்று திரு ஐவன் டியோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அக்டோபர் மாதம் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த பந்தயத்துக்கான முன்பதிவுகள் இன்னும் பேரளவில் அதிகரிக்கவில்லை என்றாலும் பந்தயத்துக்கான தேதி நெருங்குகையில் தேவை அதிகரிக்கும் என்று ஹோட்டல்கள் எதிர்பார்க்கின்றன.
சிங்கப்பூருக்கு மிக அருகில் ஜோகூர் பாரு அமைந்திருப்பது, போட்டியைக் காண வரும் சுற்றுப்பயணிகளுக்கு ஒரு சிறந்த மாற்றுத் தெரிவாக விளங்குகிறது. மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் அடுத்தடுத்து எஃப்1 பந்தயங்கள் நடைபெறுவது, ஜோகூர் மாநிலத்தின் சுற்றுலாத் துறைக்குப் பலனளிக்கும் என ஜோகூர் சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத் தலைவர் ஜிம்மி லியோங் தெரிவித்தார்.
மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சிப்பாங்கில் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பஹ்ரேன் எஃப்1 கார் பந்தயத்துக்கான நுழைவுச்சீட்டுகளுக்காகக் காத்திருக்கும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் பலர், ஜோகூர் பாருவில் தங்கி சிங்கப்பூர் பந்தயத்தைக் காணத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.


