மலேசியாவில் மீண்டும் ‘எஃப்1’: முடிவை அமைச்சு எடுக்கும் என பெட்ரோனாஸ் தகவல்

மலேசியாவில் மீண்டும் ‘எஃப்1’: முடிவை அமைச்சு எடுக்கும் என பெட்ரோனாஸ் தகவல்

2 mins read
f6d361e6-8123-4844-a73b-4d0327186535
2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மீண்டும் ‘எஃப்1’ பந்தயத்தை நடத்துவது குறித்து மலேசியா ஆராய்ந்து வருகிறது. - கோப்புப் படம்: பெரித்தா ஹரியான்

கோலாலம்பூர்: மலேசியாவில் மீண்டும் ‘ஃபார்முலா ஒன்’ (எஃப்1) கார்ப்பந்தயத்தை நடத்துவது தொடர்பான இறுதி முடிவை அந்நாட்டு இளையர், விளையாட்டு அமைச்சு எடுக்கும் என பெட்ரோனாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அது அந்த அமைச்சின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும் அது கூறியுள்ளது.

இது தொடர்பாக பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு பெட்ரோனாஸ் சனிக்கிழமை (ஜூலை 25) அறிக்கை ஒன்றை அனுப்பியது.

அதில், 2026ஆம் ஆண்டு ‘எஃப்1’ பந்தயம் மீண்டும் மலேசியாவில் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளைத் தாம் அறிந்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டது.

மேலும், வர்த்தக ரீதியிலான ஓர் அமைப்பாக, தமது உத்திபூர்வ, வர்த்தக முன்னுரிமைகளுக்கு ஏற்பவும் மலேசியாவிற்கு நீண்டகால மதிப்பைக் கொண்டு சேர்க்கும் வகையிலும் கிடைக்கும் வாய்ப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளப்போவதாக அது கூறியது.

‘பக்ரேன் கிராண்ட் ப்ரீ’ போட்டி நடைபெறாவிட்டால், அதற்குப் பதிலாக மாற்றுப் போட்டியை மலேசியா நடத்தக்கூடும் என முதற்கட்டத் தகவல் வெளியானது.

அதனைத் தொடர்ந்து, செப்பாங் அனைத்துலக மோட்டார் பந்தயத் தடத்தில் (எஸ்ஐசி) ‘எஃப்1’ போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மலேசிய இளையர், விளையாட்டு அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அத்துறைக்கான அமைச்சர் டாக்டர் முகமது தவஃபீக் ஜோஹாரி வெள்ளிக்கிழமை (ஜூலை 24) தெரிவித்தார்.

மேலும், பிரதமர் அன்வார் இப்ராகிமும் அமைச்சும் இது தொடர்பான முதற்கட்டத் தகவலைப் பெற்றுள்ளதாகவும் முடிவு எட்டப்பட்டதும் கூடுதல் விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மலேசியாவில் கடைசியாக 2017ஆம் ஆண்டில் ‘எஃப்1’ பந்தயம் நடைபெற்றது.

செப்பாங் பந்தயத் தடம் இன்னமும் ‘மோட்டோ ஜிபி’ போட்டிகளை நடத்தி வருவதுடன், ‘எஃப்1’ போட்டியை நடத்துவதற்கான எஃப் பந்தயங்களை நிர்வகிக்கும் ‘எஃப்ஐஏ’ சம்மேளனத்தின் முதல்நிலை உரிமத்தையும் தொடர்ந்து தன்வசம் வைத்துள்ளது.

‘எஃப்1’ பந்தயத்தில் முன்னணியில் இருக்கும் ‘மெர்சிடீஸ்’ குழுமத்தின் முக்கியப் பங்காளியாகத் திகழும் பெட்ரோனாஸ், 2010ஆம் ஆண்டு முதல் அக்குழுமத்திற்கு நிதியாதரவு வழங்கி வருகிறது.

செப்பாங் தடத்தின் பெயர் உரிமையையும் 2023ஆம் ஆண்டு அக்டோபரில் மூன்றாண்டுகளுக்கு அது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்