ஜோகூர் பாரு: வரும் வாரங்களில் புகைமூட்டம் மோசமடையலாம் என்ற எதிர்பார்ப்பில் ஜோகூரில் முகக்கவசங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
சில குடியிருப்பாளர்கள் முகக்கவசங்களை வாங்கிச் சேமித்து வைப்பது மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாக த ஸ்டார் இணையச் செய்தி குறிப்பிட்டது.
பள்ளிக்குச் செல்லும்போது, ஆஸ்துமா பாதிப்புள்ள மகள் உட்பட தனது இரண்டு பிள்ளைகளையும் முகக்கவசம் அணிந்து செல்லுமாறு கடந்த ஒரு வாரமாகவே கூறி வருவதாக 47 வயது ஷரிஃபா ஃபைசா சலீம் என்னும் இல்லத்தரசி அந்தச் செய்தித்தாளிடம் கூறினார்.
“இக்காலகட்டத்தில் எதுவும் நடக்கலாம் என்பதால், முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்று நான் கருதுகிறேன்.
“ஜோகூரில் இன்னும் புகைமூட்டம் வரவில்லை என்றாலும், வரும் வாரங்களில் நிலைமை அப்படியோ தொடரும் என உறுதியாகச் சொல்ல முடியாது,” என்றார் அவர்.
இதற்கிடையே, முகக்கவசத் தட்டுப்பாடு குறித்து இதுவரை எந்தவோர் அதிகாரப்பூர்வ புகாரும் வரவில்லை என ஜோகூர் மாநில உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவினங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) பிற்பகல் 2 மணி நிலவரப்படி ஜோகூரின் எல்லா மாவட்டங்களிலும் காற்று மாசுக் குறியீடு 51 முதல் 100 வரை என்னும் மிதமான அளவில் இருந்தது.
ஆயினும், சரவாக் மற்றும் சிலாங்கூரின் மூன்று பகுதிகளில் காற்று மாசுக் குறியீடு ஆரோக்கியமற்ற அளவைக் காட்டியது.
குறிப்பாக, சரவாக்கில் உள்ள செரியான் பகுதியில் 159 என்ற அதிகபட்ச அளவு பதிவானது. மலேசியாவிலேயே ஆக அதிகமான காற்று மாசுக் குறியீட்டு அளவு இது என கருதப்படுகிறது.
சிலாங்கூரின் கிள்ளானிலுள்ள ஜோஹான் சேத்தியா என்ற பகுதி திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) காலை 9 மணியளவில் 151 என்ற ஆரோக்கியமற்ற அளவைப் பதிவு செய்தது. அதேநேரம், 58 இடங்களில் மிதமான அளவில் காற்று மாசுக் குறியீடு பதிவானது.
குறியீட்டின் அளவு 50க்குள் இருந்தால் மட்டுமே சுகாதாரமான காற்று வீசுவதாக அர்த்தம்.


