வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பயனீட்டாளர்களுக்கு ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகிய சமூக ஊடகச் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) முடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத் தடங்கல்களைக் கண்காணிக்கும் ‘டவுன்டிடெக்டர்’ (Downdetector.com) இணையத்தளம் இத்தகவலை வெளியிட்டது.
அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.11 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி திங்கட்கிழமை காலை 9.11மணி) ஃபேஸ்புக் சேவைப் பாதிப்பு குறித்து 17,000க்கும் அதிகமான புகார்கள் பதிவாகின. இன்ஸ்டகிராம் சேவை தொடர்பில் 5,000க்கும் அதிகமான முடக்கப் புகார்கள் செய்யப்பட்டன என்று அந்த இணையத்தளம் கூறியது. பல்வேறு ஆதாரங்களில் இருந்து நிலவர அறிக்கைத் தகவல்களைத் திரட்டி இந்த இணையத்தளம் இத்தரவுகளைக் கணித்துள்ளது.
இது குறித்து மெட்டா நிறுவனம் உடனடியாகக் கருத்துரைக்கவில்லை. பயனீட்டாளர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில் இந்த எண்கள் கணக்கிடப்படுவதால், பாதிக்கப்பட்டவர்களின் உண்மை எண்ணிக்கை மாறுபடக்கூடும்.
சிங்கப்பூரில், திங்கட்கிழமை காலை 9.26 மணிக்கு ஃபேஸ்புக் முடக்கம் குறித்து 229 புகார்களும் காலை 9.25 மணிக்கு இன்ஸ்டகிராம் குறித்து 109 புகார்களும் பதிவாகின. இரு தளங்களிலும் பாதிப்புக்குள்ளான புகார்களில் பாதிக்கும் மேற்பட்டவை அவற்றின் இணையத்தளப் பிரச்சினைகள் தொடர்பிலானவை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
