ஓஸ்லோ: பயனர்களின் தனியுரிமையை மீறியதற்காக நார்வே நாட்டின் தரவுக் கட்டுப்பாட்டு ஆணையம் மெட்டா நிறுவனத்திற்கு அபராதம் விதித்தது.
அந்த உத்தரவிற்கு இடைக்காலத்தடை விதிக்கக்கோரி ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் சமூக ஊடகங்களின் தாய்நிறுவனமான மெட்டா, நார்வே நீதிமன்றத்தைச் செவ்வாய்க்கிழமை அணுகியுள்ளது.
பயனர்களின் தரவுகளைச் சேகரித்து, அவர்களிடம் ஒப்புதல் படிவம் பெறாமல் அதை விளம்பரத்திற்குப் பயன்படுத்தியக் குற்றத்திற்காக மெட்டா நிறுவனத்திற்கு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதியிலிருந்து நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் நார்வே குரோன் (S$127,000) அபராதம் செலுத்த வேண்டும் என்று அந்த ஆணையம் உத்தரவிட்டது.
அந்த அபராத உத்தரவுக்கு நவம்பர் 3ஆம் தேதி வரை இடைக்காலத்தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தை மெட்டா நிறுவனம் தற்போது நாடியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய பொருளியல் பகுதியைச் (இஇஎ) சேர்ந்த நாடுகளில் உள்ள பயனர்களிடம் அவர்களின் தரவுகளை விளம்பரத்திற்குப் பயன்படுத்த ஒப்புதல் கேட்க இருப்பதாக ஆகஸ்ட் 1ஆம் தேதி மெட்டா கூறியது.
இந்த வழக்கின் விசாரணை ஓஸ்லோ வட்டார நீதிமன்றத்தில் இரண்டு நாள்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

