அமெரிக்காவின் தொழில்நுட்ப பெரும் நிறுவனமான மெட்டா, பயனாளர்கள் சந்தா செலுத்தி அதன் தனிப்பட்ட சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் சோதனை முயற்சியைத் தொடங்கவுள்ளது.
அதன் விவரங்களை பிபிசி ஊடகம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) வெளியிட்டுள்ளது.
அதன் தயாரிப்புகளான ‘இன்ஸ்டகிராம்’, ‘ஃபேஸ்புக்’, ‘வாட்ஸ்அப்’, ‘மெசஞ்சர்’, ‘திரெட்ஸ்’ போன்ற உலகப் புகழ்பெற்ற செயலிகள் பலரின் பயன்பாட்டில் உள்ளன. வரவிருக்கும் மாதங்களில், சந்தா செலுத்தி அதன்வழியாக அதிக சேவைகளைப் பயனாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
இது அந்நிறுவனம் செய்யும் சோதனை முயற்சியாகும். செயற்கை நுண்ணறிவைக் கொண்டு வழங்கப்படும் பற்பல சேவைகளைச் சந்தாதாரர்கள் கட்டணம் செலுத்தி பயன்படுத்திக்கொள்ளும் வகையில் சோதனை முயற்சி இயங்கும்.
திட்டப்படி, அதன் தளங்களின் அடிப்படைச் சேவைகள் தொடர்ந்து இலவசமாகவே அனைவருக்கும் கிடைக்கும். செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய சேவைகளுக்கு மட்டும் சந்தா திட்டம் செயல்படும்.
‘வைப்ஸ்’ போன்ற கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட அதிநவீன செயலிகளில் உள்ள காணொளி தயாரிப்பு தொழில்நுட்பத்துக்கு இந்த சந்தா பொருந்தும்.
சீன செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்பு நிறுவனம் வழங்கும் ‘மனுஸ்’ என்ற செயலியையும் டிசம்பர் மாதத்தில் மெட்டா நிறுவனம் S$2.5 பில்லியன் வெள்ளி மதிப்பில் வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதால், அந்த செயலியும் சந்தா திட்டத்தில் உள்ளடங்கும் என்று அறியப்படுகிறது.

