தோக்கியோ: ஆசியாவின் பெரும்பாலான முக்கியப் பொருளியல்களில் செப்டம்பரில் தொழிற்சாலை உற்பத்தி குறைந்ததாகப் புதன்கிழமை (அக்டோபர் 1) வெளியிடப்பட்ட தனியார் ஆய்வுகளில் தெரியவந்தது.
அமெரிக்காவின் வளர்ச்சி மெதுவடைந்ததற்கான அறிகுறிகளும் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரிகளால் எதிர்பார்க்கப்படும் தாக்கமும் சீனாவின் தேவை வலுவிழந்ததால் ஏற்பட்ட தாக்கத்துக்கு மேலும் அழுத்தம் சேர்த்துள்ளன.
உற்பத்தியாளர்கள் மீதான இந்த அழுத்தம், ஏற்றுமதியைச் சார்ந்துள்ள இப்பகுதியை அமெரிக்க வரிகளிலிருந்து பாதுகாப்பதில் ஆசியக் கொள்கை வகுப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவாலை எடுத்துக்காட்டுகிறது.
இந்த வரிவிதிப்புகள், டிரம்ப் நிர்வாகத்தின் முக்கியக் கொள்கை. இது, உலகளாவிய வர்த்தக ஒழுங்கில் திருப்பத்தை ஏற்படுத்தியதுடன், பொருளியல் வளர்ச்சிக்குத் தடையாகவும் அமைந்தது.
ஜப்பானிலும் தைவானிலும் செப்டம்பரில் உற்பத்தி நடவடிக்கை குறைந்ததாக ஆய்வுகள் காட்டுகின்றன. இதனால், அமெரிக்காவை அதிகம் சார்ந்திருக்கும் ஆசிய வணிகங்கள் நிலையற்ற தன்மையில் உள்ளன.
கவலைக்குரிய விதமாக, உலகப் பொருளியலின் முக்கிய உந்துசக்தியாக விளங்கும் சீனாவும் தொடர்ந்து மந்தநிலையில் உள்ளது.
செப்டம்பர் 29ஆம் தேதி வெளியிடப்பட்ட ஓர் அதிகாரபூர்வ ஆய்வு, சீனப் பொருளியலில் தொழிற்சாலை உற்பத்தி செப்டம்பரில் ஆறாவது மாதமாகக் குறைந்ததைக் காட்டியது. பயனீடு குறைந்ததும் அமெரிக்க வரிகளின் அழுத்தமும் இதற்குக் காரணம்.
இதற்கு மாறாக, தென்கொரியாவின் தொழிற்சாலை உற்பத்தி, எட்டு மாதங்களில் முதல்முறையாக செப்டம்பரில் விரிவடைந்தது. வெளிநாடுகளிடமிருந்து தேவை அதிகரித்ததே இதற்குக் காரணம்.