லிங்கியு அணையின் பாதுகாப்பு நவம்பரில் பரிசீலனை: ஃபடில்லா

லிங்கியு அணையின் பாதுகாப்பு நவம்பரில் பரிசீலனை: ஃபடில்லா

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Oct 2026 - 5:31 pm

2 mins read

கோலாலம்பூர்: பேரிடர் காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள், மக்களை வெளியேற்றும் பகுதிகள் குறித்த விவரங்களை வகுப்பதற்காக, ஜோகூரில் உள்ள லிங்கியூ அணைக்கான அவசரகால நடவடிக்கைத் திட்டம் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள தொழில்நுட்பக் குழுக் கூட்டத்தில் மறுஆய்வு செய்யப்படும்.

1962ஆம் ஆண்டு ஜோகூர் ஆற்று நீர் ஒப்பந்தத்தின்கீழ் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில், ஆற்றல் மாற்றம், நீர் உருமாற்ற அமைச்சு, சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு ஆகியவற்றின் தலைமையிலான தொழில்நுட்பக் குழுவின் மூலம் இந்த மறுஆய்வு மேற்கொள்ளப்படும் என்று துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார்.

“அசம்பாவிதம் ஏற்பட்டால், வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைக் காட்டும் வரைபடங்களைத் தயாரிப்பதும், அறிவிப்புகள், மக்களை வெளியேற்றும் பகுதிகளை எவ்வாறு தீர்மானிப்பது என்பதை முடிவு செய்வதும் இதில் அடங்கும்,” என்று அவர் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) நாடாளுமன்றத்தில் கூறினார்.

எரிசக்தி மாற்றம், நீர் உருமாற்றத் துறை அமைச்சருமான ஃபடில்லா, லிங்கியூ அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டியிருக்கும் நிலையில், அதில் ஏதேனும் கட்டமைப்புச் சிதைவு ஏற்பட்டால் முன்கூட்டியே எடுக்கப்பட வேண்டிய எச்சரிக்கைத் திட்டம் குறித்து தெங்காரா உறுப்பினர் மன்ட்ரி நாசிப் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தார்.

கண்காணிப்பு, ஆய்வு, பராமரிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில், மலேசிய அணை பாதுகாப்பு மேலாண்மை வழிகாட்டுதல்கள் 2017ன் படி, ஒவ்வோர் அணை உரிமையாளரும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள், அவசரக்கால நடவடிக்கைத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

லிங்கியூ அணை, நாட்டின் பிற முக்கிய அணைகளில் உள்ள முன்கூட்டியே எச்சரிக்கும் முறைகளின் தயார்நிலை குறித்த ரோம்பின் உறுப்பினர் அப்துல் காலிக் அப்துல்லாவின் கேள்விக்குப் பதிலளித்த ஃபடில்லா, அணைகளின் உரிமையாளர்கள் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்புடன் இணைந்து முன்கூட்டியே எச்சரிக்கும் முறைகளை உருவாக்க வேண்டும் என்றார்.

“தற்போது நமக்கு மிக முக்கியமானது தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதாகும். இது மிக அவசியமானது. ஏனெனில், தடுப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம் பேரிடர்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
துணைப் பிரதமர்மேலாண்மைநீர்