தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேங்காக் விமான நிலையத்தில் போலி வெடிகுண்டு மிரட்டல்; சிங்கப்பூர் ஆடவர் கைது

2 mins read
5f302b46-9d6a-40de-997f-9d1648f60661
குடும்பப் பிரச்சினை காரணமாக மனவுளைச்சலுக்கு ஆளாகி போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் கூறினர். - படம்: தி நேஷன்

பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள டோன் முவாங் அனைத்துலக விமான நிலையத்தில் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் ஆடவரை அந்நாட்டு குடிநுழைவு காவல்துறை அதிகாரிகள் நவம்பர் 22ஆம் தேதியன்று கைது செய்தனர்.

விமான நிலையத்தில் இருந்த விமானம் ஒன்றில் வெடிகுண்டு இருந்ததாக அந்த ஆடவர் பொய்யுரைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆடவர், விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தில் நவம்பர் 22ஆம் தேதி மாலை கைது செய்யப்பட்டார்.

அவருக்கு வழங்கப்பட்ட தாய்லாந்து விசா 28 நாள்களுக்கு முன்பு காலாவதி ஆகிவிட்டதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

நவம்பர் 21ஆம் தேதி பிற்பகல் 2.47 மணி அளவில் பெயர் குறிப்பிடாத ஒருவரிடமிருந்து விமான நிலைய அதிகாரிக்கு தொலைபேசி அழைப்பு கிடைத்தது.

ஹட் யாய் நகருக்குப் புறப்படும் ஏர் ஏஷியா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அந்த ஆடவர் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த விமானம் 162 பயணிகள், ஆறு சிப்பந்திகளுடன் புறப்பட இருந்தது.

அந்த விமானத்தை அதிகாரிகள் நிறுத்தி, பயணிகளை வெளியேற்றினர்.

பிறகு அந்த விமானத்தை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அதில் சந்தேகப்படும்படியான பொருள்கள், பயணிகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

இச்சம்பவத்தால் விமான நிலையத்தின் பயண அட்டவணை கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரி கூறினார்.

பயணிகளுக்கு பேரளவில் அசௌகரியம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரைக் கண்டுபிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.

அந்த நபர் டோன் முவாங் அனைத்துலக விமான நிலையத்தில் இருப்பது தெரியவந்தது.

இரவு 7 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டார்.

குடும்பப் பிரச்சினை காரணமாக மனவுளைச்சலுக்கு ஆளாகி போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அந்த ஆடவர் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.

அவர் டோன் முவாங் காவல்துறை நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

விசா காலாவதியாகிவிட்டபோதிலும் தாய்லாந்தில் தொடர்ந்து தங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அவர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

அவருக்கு எதிராக விமான நிலையம், ஏர் ஏஷியா ஆகியவற்றுடன் பாதிக்கப்பட்ட பயணிகளும் வழக்கு தொடுக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்