தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் போலி மருந்துகள்; எச்சரிக்கும் அதிகாரிகள்

2 mins read
02b88a7f-d3b6-4730-8381-344c4608d360
போலி மருந்துகளை உண்பதால் நோயாளிகளின் நிலைமை மோசமடையலாம் அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். - படம்: பிக்சல்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவில் போலி மருந்துகள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உரிமம் இல்லாமல் 6,000க்கும் அதிகமான மருந்துப் பெட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட 4.8 மில்லியன் வெள்ளி என்று அதிகாரிகள் கூறினர்.

மலேசியாவில் தொடர்ந்து அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் போலி மருந்துகள் ஆங்காங்கே விற்பனையில் உள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மலேசியச் சுகாதார அமைச்சு அமலாக்க நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளது.

அதேபோல் இணையத்திலும் கடைகளிலும் போலி மருந்துகளை மக்கள் வாங்காமல் இருக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

போலி மருந்துகளை விற்பனை செய்பவர்கள் மக்களின் பொதுநலன் கருதாமல் லாபத்தை மட்டும் குறியாக வைத்துக் குற்றச்செயலில் ஈடுபடுவதாக மருந்துகளுக்கான அமலாக்கத்துறை மலேசியாவின் ‘த ஸ்டார்’ ஊடகத்திடம் தெரிவித்தது.

அண்மையில் அந்த ஊடகம் இணையத்தில் பொய்யான முத்திரைகள் கொண்டு போலியான மருந்துகள் விற்கப்படுவதாகச் செய்தி வெளியிட்டது. மேலும் அதனுள்ளே இருக்கும் வேதிப்பொருள்களின் தரம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

பொதுவாக போலியான மருந்துகளில் அதன் வேதிப்பொருள்கள் குறித்த விவரங்கள் சரியாக இருக்காது. வேதிப்பொருளின் அளவு அதிகமாக இருக்கலாம், சுகாதாரச் சிக்கலைத் தரும் வேதிப்பொருள் மருந்தில் கலக்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

மேலும் அவற்றை உண்பதால் நோயாளிகளின் நிலைமை மோசமடையலாம் அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். போலி மருந்துகள் தயாரிக்கப்படும் இடம் தூய்மை இல்லாமல் தயாரிக்கப்படுபவை என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

தற்போது சமூக ஊடகம், இணையத்தளம் உள்ளிட்டவற்றில் போலியான மருந்துகள் விற்கப்படுகின்றன. அவற்றைக் கண்டுபிடித்துத் துடைத்தொழிக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மலேசியச் சுகாதார அமைச்சு கூறியது.

போலி மருத்து விற்பவர்கள்மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்தது. விலை குறைவாக உள்ளது என்று மக்களும் போலி மருந்துகளை வாங்க வேண்டாம் என்றும் அது அறிவுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்