கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மாணவரைப் போலியாகக் கடத்தியதற்காக சிங்கப்பூரில் படிக்கும் வெளிநாட்டு மாணவர் ஒருவருக்கு மலேசிய நீதிமன்றம் 17,000 ரிங்கிட் (5,156 வெள்ளி) அபராதம் விதித்துள்ளது.
குற்றவாளியான சாங் ருன்பாவ், ஏமாற்றியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை செவ்வாய்க்கிழமை (மே 27) ஒப்புக்கொண்டார் என்று சிஎன்ஏ ஊடகம் தெரிவித்தது. அவர், 18 வயது யி யிங்சி என்பவரின் தாயான செங் சிவென்னை ஏமாற்றியிருக்கிறார்.
யி ‘கடத்தப்பட்டதை’க் காட்டும் காணொளியைத் தாயிடம் அனுப்பி அவர் அச்செயலில் ஈடுபட்டார். யி துன்புறுத்தப்பட்டதாகவும் அதைத் தவிர்க்க அவரின் தாய் பிணைத் தொகை செலுத்தவேண்டும் என்றும் சாங் மிரட்டியதாக ஃபிரீ மலேசியா டுடே ஊடகம் தெரிவித்தது.
சாங், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் என்று மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. யி, சிங்கப்பூர் நிர்வாகக் கழக மாணவர் என்று நம்பப்படுகிறது.
செங்கிடமிருந்து ஐந்து மில்லியன் யுவென் (44,675 வெள்ளி) பறிக்க முயன்றதாக சாங், யி இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது. போலியான கடத்தல் சம்பவம் இம்மாதம் இரண்டாம் தேதி காலை 11.44 மணியிலிருந்து இரவு 9.15 மணி வரை நிகழ்ந்ததாக ஃபிரீ மலேசியா டுடே ஊடகம் குறிப்பிட்டது.

