மோசடிக் கும்பல்கள் இப்போது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, செல்லப்பிராணித் தத்தெடுப்பு தொடர்பான மோசடியில், பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே பணத்தை அனுப்ப வைத்து ஏமாற்றுகின்றனர்.
விலங்குகளுக்கு மறுவாழ்வு, அவற்றைத் தத்தெடுப்பது என்ற போர்வையில் பாதிக்கப்பட்டவர்களை ஈர்த்து, கெமரூனில் தளம் கொண்டுள்ள அக்கட்டமைப்பு அந்த மோசடியைத் தொடங்கியதாக மெட்டா இவ்வாண்டின் முதல் பாதியில் வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில் கூறியது.
அந்தக் கட்டமைப்பு, செல்லப்பிராணிகளைத் தத்தெடுப்பது குறித்த தகவல்கள் பற்றி விளம்பரப்படுத்தி, விலங்குநலப் பராமரிப்பு, போக்குவரத்து, மற்றொரு வீட்டுக்குச் செல்வதற்கான கட்டணங்கள் அகியவற்றுக்காகப் பணம் கோரியது.
ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டகிராமிலும் 100 குழுக்களையும் ஏறக்குறைய 12,000 கணக்குகளையும் கொண்டுள்ள அந்தக் கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அந்த விளம்பரங்களைத் தயாரித்தது.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ளவர்களைக் குறிவைத்து ஏமாற்ற, அந்தந்த குறிப்பிட்ட நாடுகளுக்கு ஏற்ற உள்ளடக்கங்களை உருவாக்க அந்த மோசடிக் கும்பலுக்குச் செயற்கை நுண்ணறிவு உதவியிருப்பதாக மெட்டா கூறியது.
அந்த மோசடிக்காரர்கள் விலங்குகள், செல்லப்பிராணிகள் தொடர்பான குழுக்களை உருவாக்கி, அவற்றில் தீவிரமாக இணைந்து, அதன்வழியாகத் தங்களுக்குத் தேவையான நபர்களை அடையாளம்கண்டு குறிவைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப் ஆகியவற்றின் பிரதான நிறுவனமான மெட்டா, ஆக்கமுறைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், மோசடிக்காரர்கள் அந்தத் துறைக்குள் நுழைவதற்கான தடையைக் குறைத்துள்ளதாகக் கூறியது.
மேலும், மோசடிச் செயல்களின் தரம், நுணுக்கம், அளவு ஆகியவற்றை அதிகரிக்க அந்தத் தொழில்நுட்பம் வகைசெய்துள்ளதாகவும் அது தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், சிக்கலான மோசடி முறைகளை விரைவில் அடையாளம்காண, எழுத்துகள், படங்கள், சூழல்கள் ஆகியவற்றை ஆய்வுசெய்யக்கூடிய மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுச் (ஏஐ) செயல்முறைகளில் முதலீடு செய்துவருவதாக மெட்டா தெரிவித்தது.

