போலி மருந்தகம்: பாகிஸ்தானிய ஆடவர் மலேசியாவில் கைது

போலி மருந்தகம்: பாகிஸ்தானிய ஆடவர் மலேசியாவில் கைது

2 mins read
2024ஆம் ஆண்டுமுதல் வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட நான்காம் வழக்கு
6a507feb-67a5-4fd1-bfef-6fbfea46c266
ஏழு மாதங்களுக்கும் மேலாக அந்தப் போலி மருந்தகம் இயங்கிவந்ததாக விசாரணையில் தெரியவந்தது. - படம்: எஸ்பிஹெச் ஊடகம்
Google News Preferred Icon

பெட்டாலிங் ஜெயா: மருத்துவர் போல வேடமிட்டு, உரிமம் இன்றி மருத்துவச் சேவைகளை வழங்கிய பாகிஸ்தானிய ஆடவர் குடிநுழைவுத் துறையால் கைது செய்யப்பட்டார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள சுபாங் வட்டாரத்தில் பெஸ்தாரி என்ற இடத்தில் வியாழக்கிழமை (ஜூன் 25) நடந்த சோதனையில் அந்த சந்தேக நபர் கைதானதாக மலேசியக் குடிநுழைவுத் துறை சனிக்கிழமை (ஜூன் 27) அறிக்கை வெளியிட்டது.

ஒரு மாதத்துக்கும் மேற்பட்ட விசாரணைக்குப் பிறகு, அந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் உரிமம் இன்றி மருத்துவர்போல் வேடமிட்ட அந்த பாகிஸ்தானிய ஆடவர் கைது செய்யப்பட்டார்.

மலேசியாவின் மருத்துவத் துறையில் பணியாற்ற எவ்வித அனுமதியும் ஆடவரிடம் இல்லை. மேலும் மலேசியாவில் நீண்டநாள் தங்கியிருக்கத் தேவையான குடிநுழைவுத் துறையின் ஆவணங்களையும் அவர் வைத்திருக்கவில்லை என்று அத்துறை அறிக்கையில் தெரிவித்தது.

ஏழு மாதங்களுக்கு மேல் இயங்கிய அந்த மருந்தகத்தில் பல மருத்துவ உபகரணங்களும் ஆவணங்களும் பதிவேடுகளும் முத்திரைகளும் கண்டெடுக்கப்பட்டன.

மக்களை ஏமாற்ற ஆண்டுதோறும் பெறப்படும் மருத்துவச் சேவை வழங்கும் மருந்தகங்களின் மலேசிய மருத்துவச் சான்றிதழையும் அந்த மருந்தகம் அங்குக் காட்சிபடுத்தியுள்ளது.

வேறொரு மருத்துவரின் உரிமத்தை அந்த ஆடவர் அங்குப் பயன்படுத்தியுள்ளார்.

எவ்வித மருத்துவச் சோதனைகளையும் செய்யாமல் ஒரு நாளுக்கான மருத்துவ விடுப்பை அந்தப் போலி மருந்தகம் $6.30 (20 மலேசிய ரிங்கிட் ) என்ற விலைக்கு விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

2024ஆம் ஆண்டு முதல் போலி மருத்துவர்களாக இதுவரை நான்கு வெளிநாட்டினர் சார்ந்த வழக்குகள் பதிவாகியுள்ளன என்பதையும் மலேசிய குடிநுழைவுத் துறை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகுடிநுழைவுகைதுபாகிஸ்தான்ஆடவர்போலி மருத்துவர்