துபாய்: சமூக ஊடகங்களில் தவறான, பொய்யான தகவல்களைப் பதிவிட்டு அச்சத்தையும் பதற்றத்தையும் உண்டாக்கியதாக ஐக்கிய அரபு சிற்றரசில் 35 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 19 பேர் இந்தியர்கள்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஈரானை இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்கின. இதனால் ஈரானும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களையும் இஸ்ரேலையும் தாக்கி வருகிறது.
துபாய், கத்தார், ஓமான் உள்ளிட்ட பகுதிகளிலும் ஈரான் அடிக்கடி ஏவுகணைகளைக் கொண்டு தாக்குகிறது. இதனால் மத்திய கிழக்கு வட்டாரமே பதற்றத்தில் உள்ளது.
இச்சூழலில், ஏவுகணைகளை இடைமறிக்கும் நடவடிக்கைகள், தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் எடுக்கப்படும் காணொளிகள், போலியான தகவல்கள் உள்ளிட்டவற்றைப் பொதுமக்கள் இணையத்தில் பதிவிட வேண்டாம் என்று ஐக்கிய அரபு சிற்றரசு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் அதிகாரிகளின் அறிவுரையைக் கேட்காமல் சிலர் தொடர்ந்து காணொளிகளைப் பகிர்ந்து வந்தனர். அதையடுத்து தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலியான தகவல்களைப் பரப்பியதற்காகக் கைது செய்யப்பட்டவர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சனிக்கிழமையும் (மார்ச் 14) இதேபோன்ற குற்றங்களுக்காக 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் இந்தியர்கள். இக்குழு போலியான தகவலைப் பரப்பவில்லை. இருப்பினும் தாக்குதல்களைப் படம்பிடிக்கக்கூடாது என்ற விதிமுறையை மீறியதற்காக அவர்கள் கைதாகினர்.

