பங்ளாதே‌ஷில் பொய்த் தகவல்கள் கடந்த ஆண்டு 30% அதிகரிப்பு

பங்ளாதே‌ஷில் பொய்த் தகவல்கள் கடந்த ஆண்டு 30% அதிகரிப்பு

2 mins read
97c4193b-e019-4923-8ced-3ca80d1ee66e
பங்ளாதே‌ஷின் முன்னாள் பிரதமர் ‌ஷேக் ஹசினா மீண்டும் பதவிக்கு வருவதாகக் கடந்த ஆண்டு பொய்த் தகவல்கள் அதிகம் பகிரப்பட்டன. - படம்: ஏஎஃப்பி

டாக்கா: பங்ளாதே‌ஷில் கடந்த ஆண்டு பொய்த் தகவல்களின் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

2024ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க கடந்த ஆண்டு பரவிய பொய்த் தகவல்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன் உண்மையைப் போலவே அவை தென்படும் விதமும் மேம்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

மூன்றில் இரண்டு பொய்த் தகவல்கள் அரசியல் தொடர்பானவையாக இருந்தன. அவற்றில் பாதித் தகவல்கள் காணொளி வாயிலாகப் பரவின. பத்தில் ஒரு காணொளி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக இருந்தது.

பொய்த் தகவல்களைப் பரப்ப செயற்கை நுண்ணறிவு அதிகம் பயன்படுத்தப்படுவதைக் கடந்த ஆண்டின் போக்கு காட்டுவதாக ‘டிஸ்மிஸ்லேப்’ (Dismislab) எனும் உண்மைத் தகவல்களைச் சரிபார்க்கும் அமைப்பு குறிப்பிட்டது.

டிஸ்மிஸ்லேப் அமைப்பு, கடந்த ஆண்டு 4,000க்கும் அதிகமான பிரசுரிக்கப்பட்ட செய்திகளின் தலைப்புகளை ஆராய்ந்தது. அவற்றுள் பொய்த் தகவல்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் வந்த தனிநபர்களை அமைப்பு தொகுத்தது. அதில் ஆட்சியிலிருந்து கவிழ்க்கப்பட்ட பங்ளாதே‌ஷ் முன்னாள் பிரதமர் ‌ஷேக் ஹசினா முதலிடத்தில் வந்தார்.

திருவாட்டி ஹசினா குறித்து பகிரப்பட்ட பொய்த் தகவல்களில் பெரும்பாலும் அவரின் பழைய புகைப்படங்கள், காணொளிகள், அறிக்கைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. அவை அண்மையில் பகிரப்பட்டது போல சித்திரிக்கப்பட்டன.

திருவாட்டி ஹசினா மீண்டும் ஆட்சிக்குத் திரும்புவார் என்ற வதந்தியும் அதில் அடங்கும்.

இடைக்கால அரசாங்கத் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் இரண்டாவது நிலையில் வந்தார். அவர் குறித்த செய்திகள் 150 தலைப்புகளில் பிரசுரிக்கப்பட்டன.

அரசாங்கம் நிலையற்றது, பொய்யானது என்று பெரும்பாலான பொய்த் தகவல்கள் பகிரப்பட்டன. திரு யூனுஸ் பதவியிலிருந்து விலகிவிட்டார் என்றும் விலகவிருக்கிறார் என்றும் பொய்த் தகவல்கள் பரவலாகப் பரவின.

கடந்த ஆண்டு பரவிய பொய்த் தகவல்களில் கிட்டத்தட்ட 10 விழுக்காடு அதாவது 417 சம்பவங்கள் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்று டிஸ்மிஸ்லேப் அமைப்பு சொன்னது.

குறிப்புச் சொற்கள்