குவந்தான்: ஐந்து வயது சிறுவனை அவனது குடும்பம் உணவகத்தில் தவறுதலாக விட்டுச் சென்றனர்.
அச்சிறுவன் தங்களுடன் இல்லை என்பதை அவர்கள் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து உணர்ந்தனர்.
இந்தச் சம்பவம் மலேசியாவின் பாஹாங் மாநிலத்தில் உள்ள தெமர்லோ நகரில் நிகழ்ந்தது.
கடந்த சனிக்கிழமை (ஜூலை 26) இரவு 10 மணி அளவில் அச்சிறுவன் உணவகத்தில் தனியாக இருப்பதை வாடிக்கையாளர்கள் கண்டனர்.
இதுகுறித்து காவல்துறையிடம் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகள் உணவகத்தை அடைந்தபோது அவன் நலமாகவும் பத்திரமாகவும் இருந்ததாகத் தெமர்லோ காவல்துறை ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூலை 27) ஃபேஸ்புக்கில் பதிவிட்டது. சிறுவன் தெமர்லோ காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
சிறுவனின் குடும்பம் இரவு நேர உணவுக்காக அந்த உணவகத்துக்கு இரண்டு வாகனங்களில் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
சாப்பிட்ட பிறகு, சிறுவனின் குடும்பத்தினர் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
உறவினரின் காரில் செல்ல அச்சிறுவன் விரும்பியதாகவும் ஆனால் அவன் அந்த காரில் செல்லவில்லை என்றும் காவல்துறை கூறியது.
இது தெரியாமல் அனைவரும் உணவகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
கம்பாங் எனும் நகரை அடைந்த பிறகே, சிறுவன் தங்களுடன் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
தெமர்லோவுக்கும் கம்பாங்கிற்கும் இடையே 110 கிலோமீட்டர் தூரம்.
பயண நேரம் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் என்று தெரிவிக்கப்பட்டது.
இரவு 11.30 மணி அளவில் சிறுவனின் உறவினர் ஒருவர் காவல்துறைனியருடன் தொடர்புகொண்டார். சிறுவன் காவல் நிலையத்தில் இருப்பது தெரியவந்ததும் அவர் நிம்மதி அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) அதிகாலை 12.40 மணி அளவில் காவல் நிலையத்திலிருந்து அச்சிறுவனை அவனது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர்.

