புதுடெல்லி: உக்ரேனுக்கு எதிராக போரிட கட்டாயப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டதாக அவருடைய உறவினர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு ரவி மவுன் எனும் அந்த 21 வயது ஆடவரின் உடலைக் கொண்டுவர அரசாங்கத்திடம் அவருடைய குடும்பத்தார் முறையிட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக ஆடவர்கள் பலரும் அவர்களின் குடும்பத்தாரும் இந்திய வெளியுறவு அமைச்சைத் தொடர்புகொண்டுள்ளனர். ரஷ்யாவில் வேலை வாங்கித் தருவதாக அவர்களிடம் கூறி, அங்கு சென்றதும் ரஷ்ய ராணுவத்தில் கட்டாயப்படுத்திச் சேர்க்கப்பட்டதாக அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
போரில் குறைந்தது நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறினர்.
போக்குவரத்துத் துறையில் வேலை பெற்றுத் தருவதாக முகவர் ஒருவர் கூறியதைத் தொடர்ந்து, ஜனவரியில் ரவி மவுன் ரஷ்யாவுக்குச் சென்றார். அங்கு சென்றவுடன் உக்ரேனுக்கு எதிராகப் போரிட அவர் கட்டாயப்படுத்தப்பட்டார்.