புத்ராஜெயா: நேப்பாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 55 மலேசியர்களின் குடும்பத்தினர், தங்கள் உறவினர்களைத் தேடும் பணிகள் குறித்த அண்மைய தகவல்களை அறிய அரசுப் பிரதிநிதிகளைச் சந்திக்க ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) காலை 9 மணிக்கே மலேசிய வெளியுறவு அமைச்சுக்கு வந்தடைந்தனர்.
இச்சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில், தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணுதல் ஆகியவை குறித்த விரிவான விளக்கங்களைப் பெற இக்குடும்பத்தினருக்கு இந்தத் தனிப்பட்ட சந்திப்பு வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு, மலேசிய சிறப்புப் பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழு (ஸ்மார்ட்), மலேசிய அரச காவல்துறை, மலேசிய வேதியியல் துறை, தேசியப் பதிவுத் துறை, சமூக நலத் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 26ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்திற்கு ஐந்து நாள்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 30ஆம் தேதி பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் அரசாங்கம் மேற்கொண்ட ஆரம்பகட்ட அதிகாரபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது கூட்டம் இது. இருப்பினும், அந்த ஆரம்பகட்டச் சந்திப்பில் அனைத்துக் குடும்பங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேப்பாளத்தில் மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காண உதவும் வகையில், பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கான மூடிய அறை விளக்கக் கூட்டம் மற்றும் மரபணு மாதிரிகள் சேகரிக்கும் பணி ஆகியவை ஆகஸ்ட் 30ஆம் தேதி மலேசிய வெளியுறவு அமைச்சில் நடைபெற்றன.
11 பேர் கொண்ட ‘ஸ்மார்ட்’ குழுவினர் செப்டம்பர் 5ஆம் தேதி நேப்பாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேப்பாள அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாப்பானதாகக் கருதப்பட்ட பகுதிகளில் அவர்கள் தரைவழித் தேடுதல் மற்றும் ட்ரோன் மூலமான கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனர். பின்னர், செப்டம்பர் 14ஆம் தேதி அவர்கள் மலேசியா திரும்பினர்.
இக்குழுவினர் திரும்பியதால், 55 மலேசியர்களின் நிலை குறித்த விவரங்களை அறியும் முயற்சிகள் முடிந்துவிட்டதாக அர்த்தமல்ல என்று மலேசிய வெளியுறவு அமைச்சு முன்னதாகவே தெரிவித்திருந்தது.
நேப்பாள அதிகாரிகள் தேடுதல், சரிபார்ப்பு, அடையாளம் காணும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதே வேளையில் மலேசியாவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தூதரக ரீதியிலான முயற்சிகளைத் தொடர்ந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
