ஜோகூர் பாரு: கடத்தப்பட்ட மலேசிய வர்த்தகரை விடுவிக்க கடத்தல்காரர்களிடம் அவரது குடும்பத்தினர் 20 மில்லியன் ரிங்கிட் (S$6.1 மில்லியன்) கொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 13ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் அந்த வர்த்தகர் கடத்தப்பட்டதாக சைனா பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டது.
வர்த்தகப் பயணம் மேற்கொள்ள இருந்த அந்த ஆடவர், சினாய் விமான நிலையத்துக்குச் செல்ல இருந்தபோது அவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜோகூர் பாருவில் உள்ள தமது வீட்டுக்கு வெளியே காலணிகளைப் போட்டுக்கொண்டிருந்தபோது முகமூடி அணிந்த மூன்று ஆடவர்கள் அவரை நோக்கிச் சென்றனர்.
அவர்களில் ஒருவர் அந்த வர்த்தகரைக் கம்பால் அடித்தார்.
மற்றொருவர் அவரது தலையைத் துணியால் மூடினார்.
மூன்றாவது நபர் வர்த்தகரிடம் துப்பாக்கியைக் காட்டி, கைகளைக் கட்டி காரில் ஏற பலவந்தப்படுத்தினார்.
வர்த்தகரின் கைப்பேசியைக் கடத்தல்காரர்கள் அவரது வீட்டுக்கு வெளியே விட்டுச் சென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அங்கிருந்து வெறும் பத்து நிமிடப் பயணத்துக்குப் பிறகு, ஒரு வீட்டிற்கு அந்த வர்த்தகரைக் கடத்தல்காரர்கள் கொண்டு சென்றனர்.
அது எந்த வீடு என்று யாருக்கும் தெரியவில்லை.
அங்கிருந்து அவர்கள் வர்த்தகரின் வீட்டு வாசலில் விட்டுச் சென்ற கைப்பேசியை அழைத்து அவரது குடும்பத்தினருடன் தொடர்புகொண்டு 30 மில்லியன் ரிங்கிட் கேட்டு மிரட்டினர்.
பிறகு அந்தத் தொகை 20 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டது.
வர்த்தகரின் குடும்பம் 5 மில்லியன் ரிங்கிட் கொடுத்தது.
ஜோகூர் பாருவில் உள்ள தாமான் பெர்லிங் பகுதியில் இருக்கும் குடியிருப்புப் பகுதியில் ரொக்கத்தை அவர்கள் விட்டுச் சென்றனர்.
எஞ்சிய தொகையை சிங்கப்பூரில் உள்ள நண்பர் மூலம் அவர்கள் கடத்தல்காரர்களுக்கு அனுப்பிவைத்தனர்.
கடத்தப்பட்ட வர்த்தகர் 14 மணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்டார்.
கடத்தல்காரர்கள் நால்வர் என்றும் அவர்களில் ஒருவர் பெண் என்றும் அந்த வர்த்தகர் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
இத்தகைய மிகக் கடுமையான குற்றங்கள் குறித்து அனைத்துக் கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்திய பிறகே அறிக்கை வெளியிடப்படும் என்று ஜோகூர் காவல்துறைத் தலைவர் எம். குமார் கூறினார்.