வாஷிங்டன்: அமெரிக்காவின் கொலோரோடோவில் பத்து மாதங்களுக்குமேல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த எகிப்திய குடும்பம் ஒன்றை மீண்டும் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
கொலோரோவீன் போல்டர் பகுதியில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பில் ஹயாம் எல் கமால் என்ற பெண்ணையும் அவரது ஐந்து பிள்ளைகளையும் அதிகாரிகள் கைதுசெய்தனர். அந்தப் பெண்ணின் பிள்ளைகள் 5 வயதிலிருந்து 18 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
எல் கமாலின் கணவர் முகமது சப்ரி சொலைமான் வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. அந்த ஆடவர் கொலை முயற்சி, தாக்குதல், வெறுப்புணர்ச்சி ஆகிய குற்றங்களை எதிர்கொண்டார்.
ஆடவரின் குடும்பம் எந்த அளவுக்கு அந்தத் தாக்குதல் குறித்து அறிந்திருக்கிறது என்பதை விசாரிப்பதாக அமெரிக்க அரசாங்கம் இதற்குமுன் கூறியிருந்தது. ஆடவரின் மனைவியும் பிள்ளைகளும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டனர்.
தமது கணவர் சொலைமானை விவாகரத்து செய்துவிட்டதாகக் கூறிய எல் கமால், போல்டர் தாக்குதலுக்கு வன்மையாகக் கண்டனம் தெரிவித்ததுடன் தமக்கும் தமது குடும்பத்துக்கும் அந்தத் தாக்குதல் குறித்து எதுவும் தெரியாது என்றார்.
இந்நிலையில், பத்து மாதங்களுக்கும்மேல் தடுப்புக் காவலில் இருந்த எல் கமாலையும் அவரது பிள்ளைகளையும் விடுவிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
விடுவிக்கப்பட்ட 48 மணி நேரத்துக்குள் அதிகாரிகள் அவர்களை மீண்டும் பிடித்தனர்.
இதற்கிடையே, அமெரிக்க உள்துறை அமைச்சு, விடுவிக்கப்பட்ட குடும்பத்துக்குத் தேவையான அனைத்தும் செய்யப்படுகின்றன என்றும் குடும்பத்தை விடுவித்த நீதிபதி ஓர் ஆர்வலர் என்றும் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்கர்கள் மத்தியில் அந்தப் பயங்கரவாதக் குடும்பம் மீண்டும் நடமாட வகைசெய்யும் விதமாக நீதிபதி அவர்களை விடுவித்ததாக அமைச்சு சாடியது.
எனினும், நீதிமன்றம் மீண்டும் தங்களை நிரபராதி என்று விடுவிக்கும் என்று நம்பிக்கைக் கொண்டுள்ளதாகக் குடும்பம் குறிப்பிட்டது.
விடுவிக்கப்பட்டப் பிறகு ஏன் அந்தக் குடும்பத்தை அதிகாரிகள் மீண்டும் கைதுசெய்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

