வெலிங்டன்: நியூசிலாந்து விமானியான 38 வயது திரு ஃபிலிப் மெர்டென்சை விடுவித்த இந்தோனீசியப் போராளிகளுக்கு அவரது குடும்பத்தினர் செப்டம்பர் 22ஆம் தேதியன்று நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
திரு மெர்டென்சை மேற்கு பாப்புவா தேசிய விடுதலை ராணுவம் எனும் பிரிவினைவாத அமைப்பு ஓன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகப் பிணைக் கைதியாக வைத்திருந்தது.
அப்போது அவரை நல்லபடி பார்த்துக்கொண்டதற்காக அவரது குடும்பத்தினர் போராளிகளுக்கு நன்றி கூறினர்.
இந்தோனீசிய விமானச் சேவையான சுசு ஏர் நிறுவனத்துக்காக திரு மெர்டென்ஸ் விமானியாகப் பணிபுரிந்துகொண்டிருந்தபோது 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதியன்று அவர் பாப்புவாவில் உள்ள என்டுகா விமான நிலையத்தில் போராளிகளால் கடத்தப்பட்டார்.
திரு மெர்டென்சின் விடுதலைக்காகப் பாடுபட்ட இந்தோனீசிய அரசாங்கம், இந்தோனீசியக் காவல்துறை, இந்தோனீசிய ராணுவம் ஆகியவற்றுடன் நியூசிலாந்து அதிகாரிகளுக்கும் அவரது குடும்பத்தினர் நன்றி கூறினர்.
திரு மெர்டென்ஸ் பிணைக்கைதியாக இருந்தபோது அவர் நலமாக இருப்பதைக் காட்ட அவரை அவ்வப்போது காணொளி எடுத்து அந்தக் காணொளிகளை அவரது குடும்பத்தாருக்கும் நியூசிலாந்து அரசாங்கத்துக்கும் போராளிகள் அனுப்பிவைத்தனர்.

