செயின்ட் அய்னன், பிரான்ஸ்: பிரான்சின் மத்தியப் பகுதியில் இயங்கும் விலங்கியல் தோட்டத்தில் 13 ஆண்டுகளாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு ‘பாண்டா’ இனக் கரடிகள் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) சீனாவுக்கு மீண்டும் திரும்பி அனுப்பிவைக்கப்பட்டன.
பிரியாவிடை நிகழ்வில் நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் திரண்டு இறுதியாக அவற்றை அன்புபாராட்டி அனுப்பிவைத்தனர்.
‘ஹுவான் ஹுவான்’ என்ற பெண் கரடியும் ‘யுவான்சி’ என்ற ஆண் கரடியும் சீனாவின் ‘பாண்டா அரசதந்திர’ திட்டப்படி 2012ஆம் ஆண்டு பிரான்சின் பியுவல் விலங்கியல் தோட்டத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அத்திட்டப்படி, 1972ஆம் ஆண்டு முதல் உலகின் பல நாடுகளுக்கு நல்லுறவை மேம்படுத்த சீனா பாண்டா கரடி ஜோடிகளை அமைதித் தூதுவர்களாக அனுப்பிவைத்துள்ளது.
அந்த இரு கரடிகளுக்கும் 17 வயதாகிவிட்டது. வரவிருக்கும் 2027ஆம் ஆண்டுவரை அவை பிரான்சில் வசிக்க திட்டம் இருந்தது. ஆயினும் ஹுவான் ஹுவான் பெண் கரடிக்கு சிறுநீரக நோய் ஏற்பட்டுள்ளதால் இரு கரடிகளின் ஓய்வுக் காலத்தையும் கருத்தில்கொண்டு, சீனாவில் உள்ள ’செங்டு’ எனப்படும் விலங்குகளுக்கான சரணாலயத்துக்கு அவை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் விமானம்மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.
தலை முதல் கால்வரையில் கரடி வேடம் பூண்ட தம்பதியர், அக்கரடிகளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை அவை வந்ததிலிருந்து பார்வையிட்டுள்ளதாக ஊடகத்திடம் தெரிவித்தனர். அவர்களைப் போல 200க்கும் மேற்பட்டோர் கரடிகள்மேல் பாசப்பிணைப்பைப் பகிர பிரியாவிடை நிகழ்ச்சிக்கு விலங்கியல் தோட்டத்துக்கு வந்திருந்தனர்.
தற்போது உலகெங்கும் கிட்டத்தட்ட 20 விலங்கியல் தோட்டங்களில் சீனாவின் பாண்டா கரடிகள் உள்ளன.

