அமெரிக்க முன்னாள் அதிபருக்குப் பிரியாவிடை; தேசிய ஈமச்சடங்குச் சேவை

2 mins read
1da145e0-7336-4d4d-b270-00493c4e2b7b
ஜியார்ஜியா மாநிலத்தில் அமெரிக்காவின் காலஞ்சென்ற முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் சிலை. - படம்: இபிஏ

ஜார்ஜியா: அமெரிக்காவின் காலஞ்சென்ற முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கு சனிக்கிழமை (ஜனவரி 4) மக்கள் தங்கள் மரியாதையைச் செலுத்தத் தொடங்கினர்.

அமெரிக்க அதிபர்களில், ஆக அதிக நாள்கள் வாழ்ந்த அவருக்கு ஆறு நாள் பிரியாவிடைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திரு கார்ட்டர் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி தமது 100வது வயதில் ஜார்ஜியாவில் உள்ள தமது சொந்த ஊரான பிளேன்ஸ் நகரில் காலமானார். அதனையடுத்து, நாடு முழுதும் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

அரசாங்க மரியாதையுடன் நடைபெறும் திரு கார்ட்டரின் இறுதிச்சடங்கு அதிகாரபூர்வமாக சனிக்கிழமை தொடங்கியது. தற்போதைய, முன்னாள் ரகசிய சேவை அதிகாரிகள் அவரது சவப்பெட்டியை ஏந்தி சவவண்டியில் வைத்தபின், அது ‘பிளேன்ஸ்’ முழுவதும் வலம் வந்தது.

திரு கார்ட்டரின் நல்லுடலை ஏற்றிச்செல்லும் வாகனம் அவரது குடும்பத்தின் வேர்க்கடலைப் பண்ணையில் சற்று நேரம் நிறுத்தப்பட்டது. அமெரிக்காவின் 39வது அதிபருக்கு மரியாதை செலுத்தும் வகையில், பண்ணை மணி ஒன்று 39 முறை ஒலித்தது.

அதனைத் தொடர்ந்து, அவரது நல்லுடல் ஜார்ஜியா கேப்பிட்டோலுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

திரு கார்ட்டர் ஆளுநராவதற்கு முன்னர் அங்கு அரசு செனட்டராகச் சேவையாற்றினார். அங்கு அவருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்படும்.

திரு கார்ட்டரின் நல்லுடல் அங்கிருந்து கார்ட்டர் அதிபர் நிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அவரது நல்லுடல் ஜனவரி 4ஆம் தேதி இரவு 7 மணிமுதல் ஜனவரி 7ஆம் தேதி காலை ஆறு மணிவரை அங்கு வைக்கப்பட்டிருக்கும். பொதுமக்கள் அங்கு அவருக்கு மரியாதை செலுத்தலாம்.

திரு கார்ட்டரின் நல்லுடல் ஜனவரி 7ஆம் தேதி காலை ஜார்ஜியாவில் உள்ள ராணுவத் தளத்திலிருந்து வாஷிங்டனுக்கு வெளியே உள்ள ‘ஜாய்ன்ட் பேஸ் ஆண்ட்ரூஸ்’ ஆகாயத் தளத்திற்கு அமெரிக்க ஆகாயப் படை விமானம் மூலம் கொண்டு செல்லப்படும்.

ஜனவரி 9ஆம் தேதி தேசிய ஈமச்சடங்குச் சேவை நடத்தப்படும்.

இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் ஜனவரி 9ஆம் தேதியை தேசிய துக்க அனுசரிப்பு நாளாக அறிவித்துள்ளார். மத்திய அரசாங்க அலுவலகங்கள் அன்று மூடப்பட்டிருக்கும்.

குறிப்புச் சொற்கள்