ஜகார்த்தா: இனப்பெருக்கத்துக்காகப் பயன்படுத்தப்படும் கால்நடைகளை இறக்குமதி செய்ய இந்தோனீசியப் பண்ணையாளர்களை அந்நாட்டு அரசாங்கம் ஊக்குவிக்கிறது.
2025ஆம் ஆண்டில் 400,000 கால்நடைகள் இருக்க வேண்டும் என்று இந்தோனீசியா இலக்கு கொண்டுள்ளது.
அரசாங்கம் வழங்கும் இலவச பள்ளி உணவுத் திட்டத்துக்கு தேவையான இறைச்சி, பால் ஆகியவற்றைப் பெற இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்தோனீசிய விவசாயத்துறை அமைச்சு புதன்கிழமையன்று (ஜனவரி 8) தெரிவித்தது.
இலவச உணவுத் திட்டம் மூலம் 80 மில்லியனுக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் உணவு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக $28 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பண்ணையாளர்கள் இறக்குமதி செய்யும் 400,000 மாடுகளில் பாதி, பால் தரும் பசுமாடுகளாக இருக்க வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது என்று இந்தோனீசியாவின் விவசாயத்துறை துணை அமைச்சர் சுதர்யோனோ கூறினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இனப்பெருக்கத்துக்காக 2 மில்லியன் மாடுகளை இறக்குமதி செய்ய இந்தோனீசியா இலக்கு கொண்டுள்ளது.
இதற்காக பண்ணையாளர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படும் என்ற விவரங்களை இந்தோனீசிய அரசாங்கம் வெளியிடவில்லை.
தொடர்புடைய செய்திகள்
கால்நடைகளை ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தோனீசியா இறக்குமதி செய்கிறது
தனக்குத் தேவையான பாலை இந்தோனீசியா நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்கிறது.
பிரேசிலிலிருந்து கால்நடைகளை இறக்குமதி செய்வது குறித்து இந்தோனீசியா பரிசீலனை செய்து வருகிறது.

