ஜோகூர் பாரு சோதனைச்சாவடியில் விரைவான குடிநுழைவு அனுமதி

1 mins read
b9a3349c-11f0-4070-aceb-64ed931e5c25
சிங்கப்பூரர்களும் இப்போது மின்னுழைவாயில் (e-gate) வசதியைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இனி அவர்கள் விரைவாகக் குடிநுழைவு அனுமதி பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. கோப்புப்படம்: பெரித்தா ஹரியான் -

ஜோகூர் பாரு: கடற்பாலத்தில் உள்ள மலேசிய சோதனைச்சாவடியில் இப்போது ஒரு மணி நேரத்திற்குக் கிட்டத்தட்ட 2,300 வாகனங்கள் குடிநுழைவு அனுமதி பெற்றுச் செல்ல முடியும் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலேசியத் தரப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குறுகிய கால நடவடிக்கைகளால் இது சாத்தியமாகிறது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் குடிநுழைவு அதிகாரிகளுக்குப் பயிற்சியளித்து, குறிப்பாக அவர்களை உச்ச நேரங்களில் சோதனைச்சாவடி முகப்புகளில் பணியமர்த்தவும் 'கியூஆர்டி' எனப்படும் விரைவு நடவவடிக்கைக் குழு நடவடிக்கைகள் கைகொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது..

இதற்குமுன் ஒரு மணி நேரத்திற்குக் கிட்டத்தட்ட 1,400 வாகனங்களுக்கு மட்டுமே குடிநுழைவு அனுமதி பெற முடிந்தது.

சிங்கப்பூரர்களும் இப்போது மின்னுழைவாயில் (e-gate) வசதியைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பேருந்து வழியாக ஜோகூர் வருவோரும் இனி விரைவாகக் குடிநுழைவு அனுமதி பெற முடியும் என்று மலேசிய குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் கைருல் ஸைமீ தௌட் கூறினார்.

இதற்கு முன்னர் மலேசியர்கள் மட்டுமே மின்னுழைவாயில் வசதியைப் பயன்படுத்த முடிந்தது.

இந்தக் கூடுதல் வசதிகளால் குடிநுழைவு அனுமதி பெறுவது வேகமாக இருக்கும் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.